புத்ரஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அடுத்த தேர்தலை முன்னிட்டு நகரத்தில் வாழும் மக்களின் வாக்குகளைப் பெற புதிய மாற்றங்களை திங்கட்கிழமை (ஜனவரி 5) அறிவித்துள்ளார்.
பொறுப்பில் உள்ள தலைவர்கள் சேவைக் காலத்தின்போது சீர்த்திருத்தங்களைச் செய்யவேண்டும் என்றும் சேவைக் காலத்தையும் மீறி பதவியில் தொடரக்கூடாது என்றும் திரு அன்வார் சொன்னார்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்து மத்திய நிர்வாகத் தலைமையகத்தில் அமைச்சர்கள் முன்னிலையிலும் நூற்றுக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் முன்பும் திரு அன்வார் உரையாற்றினார்.
நகரத்தில் வாழும் மக்களிடையேயும் சீன வாக்காளர்கள் மத்தியிலும் தமது நிர்வாகத்துக்கான ஆதரவு நலிவடைந்துவருவதாலும் பெரிகத்தான் நேஷனல் கட்சி ஆட்சியை மாற்ற முற்படுவதாலும் திரு அன்வார் மாற்றங்களை அறிவித்தார்.
“ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான வரம்பு உண்டு. அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் நிரந்தரமாகப் பதவியில் தங்கிவிட முடியாது. அது பிரதமர் உள்பட அனைவருக்கும் பொருந்தும், என்றார் திரு அன்வார்.
எனவே பிரதமரின் ஆட்சிக் காலம் 10 ஆண்டு அல்லது இரண்டு தவணைக் காலத்துக்கு மேல் இருக்காது என்று புத்தாண்டு உரையில் திரு அன்வார் குறிப்பிட்டார்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரதமராகப் பொறுப்பு வகிப்பவருக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இருக்கும் வரை பதவியில் நீடிக்கலாம்.
எனினும் 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெளியிட்ட கட்சி அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்று திரு அன்வார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
டாக்டர் மகாதீர் முகமது, 2018ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். அவரால் ஏற்பட்ட சேதத்தை நிவர்த்திச் செய்ய பிரதமருக்கான கால அவகாசம் விதிக்கப்படுவதாகத் திரு அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கட்சி அப்போது சொல்லியிருந்தது.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தையும் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தையும் தனித்தனியாகப் பிரிக்கப்போவதாகவும் திரு அன்வார் சொன்னார்.
தகவல் சுதந்திரத்துக்கான மசோதா ஆகியவையும் ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றார் அவர்.

