பெட்டாலிங் ஜெயா: மலாய், இந்தியச் சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள சமூக முயற்சியானது அமைதி வழியைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பாராட்டியுள்ளார்.
பிரிவினையைப் புறந்தள்ளி, இருதரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள மரியாதையை உயர்த்திப் பிடிக்கும் முயற்சி இது என்று வியாழக்கிழமை (மார்ச் 19) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
“பணிவன்பு, ஒற்றுமை, இனங்களுக்கு இடையிலான மரியாதை ஆகிய விழுமியங்களில் உறுதியாக நிற்கும் மலேசியாவின் உண்மையான ஆன்மாவை இது வெளிப்படுத்துகிறது.
“நாட்டின் வலிமைக்கு அடித்தளமாக விளங்கும் இந்த ஒற்றுமையை நாம் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சியைச் சாத்தியப்படுத்திய மலேசியக் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் திரு அன்வார் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டார்.
நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் இத்தகைய முன்னெடுப்புகள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இந்திய, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 30 பேராளர்கள் கலந்துகொண்டனர். அண்மைக்காலமாகச் சர்ச்சைகளில் சிக்கிய சிலர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன்னிலை விளக்கமளிக்க வாய்ப்பளித்தது, பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

