கோலாலம்பூர்: இரண்டு மாநிலங்கள் இந்த வாரம் திடீர்த் தேர்தல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பதற்றங்களின் அறிகுறிகளுக்கு மத்தியில், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆளும் கூட்டணி, தனக்கான மக்கள் ஆதரவு தொடர்பில் சோதனையை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்களும் அதிகரித்து வருகின்றன.
அன்வாரின் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சிகளில் இரண்டு, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அரசாங்கங்களை வழிநடத்துகின்றன. அங்கு முறையே ஜூன் 1, 5ஆம் தேதிகளில் மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டு, 60 நாள்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.
மாநிலத் தேர்தல்கள் நாடாளுமன்றத்தில் அன்வாரின் பெரும்பான்மையை நேரடியாகப் பாதிக்க மாட்டா என்றாலும், ஏதேனும் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டால், 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அவரது கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் பலவீனமடையக்கூடும் என்று கருதப்படுகிறது.
தமது நிர்வாகத்திற்குள் உட்கட்சிப் பிளவுகள் தொடர்ந்து அதிகரித்தால், திடீர்த் தேர்தல் நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அன்வார் மே மாதம் கூறினார்.
பல இனத்தவர் வாழும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இன, சமயப் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, அன்வாரின் ஆளும் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. மேலும், சீர்திருத்தங்கள் மெதுவாக மேற்கொள்ளப்படுவது குறித்து அவரது முற்போக்குப் பங்காளிகளிடையே விரக்தியும் அதிகரித்துள்ளது.
நெகிரி செம்பிலானில் தற்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. அங்கு 2028ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அடுத்த தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அதே நேரம், ஜோகூரில் பாரிசான் கூட்டணி ஆட்சி செய்கிறது. அங்கு 2027ஆம் ஆண்டு வரை மாநில அரசாங்கம் ஆட்சி நடத்தலாம் என்ற நிலையும் இருந்தது.
கூட்டணிக்கு இடையேயான பதற்றங்களின் அறிகுறியாகக் கருதப்படும் வகையில், ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்கத்தானின் ஆதரவின்றி தனித்துப் போட்டியிடப் போவதாக பாரிசான் கூட்டணி அறிவித்துள்ளது. நெகிரி செம்பிலானில், கடந்த மாநிலத் தேர்தலில் 17 இடங்களை வென்ற பக்கத்தான் கூட்டணி, அனைத்து 36 இடங்களிலும் போட்டியிடும்.
மேலும் மலாக்காவிலும் சரவாக்கிலும் வரும் மாதங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மாநிலத் தேர்தல்களுக்கான தேதிகளை நிர்ணயிக்கும் தேர்தல் ஆணையம், முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துவது, மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த அனுமதித்து, செலவுகளை மிச்சப்படுத்தும் என்று கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

