ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க நிறுவனங்களுக்கு மலேசியப் பிரதமர் அழைப்பு

ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க நிறுவனங்களுக்கு மலேசியப் பிரதமர் அழைப்பு

2 mins read
6d400d83-fc20-4ca8-b695-eda2c7c6d44e
ஊழியர்கள்மீது நிறுவனங்கள் அதிக அக்கறையும் பரிவும் காட்ட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் கூறினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: ஊழியர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிறுவனங்கள், அவர்கள்மீது அதிக அக்கறையும் பரிவும் காட்ட வேண்டும் என்று திரு அன்வார் கூறினார்.

நாட்டின் அமைதியும் அதிவேக தேசிய வளர்ச்சியும் ஊழியர்கள் உட்பட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் நலத்துடன் இருக்கின்றனர் என்ற உத்தரவாதத்தைத் தரும் வகையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

“நாடு அமைதியாக இருக்க வேண்டும்; தொடர்ந்து வளர்ச்சிகாணவும் முன்னேறவும் வேண்டும். ஆனால் அதே நேரத்தில், ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படுவதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். அதற்குத்தான் முன்னுரிமை,” என்று அவர் சொன்னார். இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் மலேசியப் பிரதமர் உரையாற்றினார்.

நாட்டின் தற்போதைய பொருளியல் நிலைமை, பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்று அவர் கூறினார். வலுவான வளர்ச்சி, சாதனை அளவிலான முதலீடு, குறைவான வேலையின்மை விகிதம், ஆசியாவில் மலேசிய நாணயத்தின் வலுவான நிலை முதலியவற்றை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.

இருப்பினும், அந்த முன்னேற்றங்களிலிருந்து ஊழியர்கள், குறிப்பாகக் குறைந்த, நடுத்தர வருமானப் பிரிவினர் நியாயமான அனுகூலங்களைப் பெறுகின்றனரா என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

“சில பெரிய நிறுவனங்கள் 1 பில்லியன் அல்லது 2 பில்லியன் ரிங்கிட் லாபம் ஈட்டுகின்றன. அப்படி இருந்தும் ஊழியர்களுக்கு 40 ரிங்கிட் சம்பள உயர்வு கொடுப்பதை ஏற்றுக்கொள்ள அவை யோசிக்கின்றன. ஊழியர்களும் நேர்மையாகக் கூடுதல் உற்பத்தித்திறனோடு வேலை செய்ய வேண்டும்,” என்றார் திரு அன்வார்.

அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் ஊழியர்களை எப்படி நடத்துகிறோம் என்பதைச் சீர்தூக்கி, மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அரசாங்கம், ஊழியரணியில் பெண்கள் பங்கெடுப்பதை ஆதரவளிக்கும் வகையில், மகப்பேற்றுக்குப் பிந்திய விடுப்புப் படித்தொகையை அறிமுகம் செய்யவிருக்கிறது. குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு அவர்களுக்கு ஏற்படக்கூடிய மனவுளைச்சலைக் குறைக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது.

ஊழியரணியில் சேரும் பெண்களின் விகிதம், குறிப்பாக 25 வயதுக்கும் 39 வயதுக்கும் இடையில் உள்ள பிரிவினரிடையே, சற்றுக் குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்தே புதிய திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டதாகப் பிரதமர் அன்வார் சொன்னார்.

மகப்பேற்று விடுப்புக்குப் பிறகு, தாய்மார் சிலருக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம். புதிய திட்டம், அத்தகையோருக்குக் கூடுதல் நிதி உதவி செய்ய வழிவிடும்.

வேலைவாய்ப்புக் காப்புறுதிக் கட்டமைப்புச் சட்டம் 2017ல் திருத்தம் செய்வதன்வழி, புதிய திட்டம் அறிமுகம் காணும் என்றார் திரு அன்வார்.

புதிய திட்டத்தால் 132,000க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பலன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியப் பிரதமர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்