கோலாலம்பூர்: வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) இந்து பக்தர்களால் கொண்டாடப்படும் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) பிற்பகல் பத்துமலைக்குச் சென்றார்.
தைப்பூசத்தின்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்களின் முக்கிய மையமான பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் வளாகத்தை இந்த வருகை மையமாகக் கொண்டிருந்தது.
பிற்பகல் 2.30 மணியளவில் வந்த திரு அன்வாரை, மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் ஆர். ரமணன், சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதின் ஷாரி, கோவில் நிர்வாக அதிகாரிகள் வரவேற்று, முக்கியப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
ஊர்வல வழித்தடங்கள், மடானி தைப்பூசத் தளத்தில் உள்ள அமைச்சு மற்றும் அரசாங்க அமைப்புகளின் கூடங்கள் ஆகியவை இதில் அடங்கும். அவை பார்வையாளர்களுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் போன்ற சேவைகளை வழங்குகின்றன.
ஒரு மணி நேரப் பயணத்தின்போது, திரு அன்வார் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் கொண்டாட்டம் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஏற்பாட்டாளர்களுடன் ஒரு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

