மலேசியப் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவி விலகல்

1 mins read
b85460c3-1f78-464e-beec-c6abb381399c
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் (வலது) படத்தில் காணப்படும் அவரின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்ஷுல் இஸ்கந்தர் முஹம்மது அகின். - படம்: ஷம்ஷுல் இஸ்கந்தர் முஹம்மது/எக்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் தென் மாநிலமான ஜோகூரில் கட்டப்படவிருக்கும் மருத்துவமனைக்குக் குத்தகை ஒப்பந்தங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதார்களுக்கு ஆதரவாகக் கடிதம் ஒன்றை எழுதி, சர்ச்சையில் சிக்கியுள்ள மலேசியப் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் தமது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

மூத்த அரசியல் செயலாளர் ஷம்ஷுல் இஸ்கந்தர் முஹம்மது அகின், ஊழலை ஒழிக்கும் அரசாங்கமாக விளங்க விரும்பும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் இருக்க பதவி விலகுவதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) தெரிவித்தார்.

தமக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை தாமே எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.

கடிதம் எழுதப்பட்ட விவரம் வெளிவந்ததும் ஊழலுக்கு எதிரான ஆட்சி என்று கூறிவரும் திரு அன்வாரின் அரசாங்கத்தின் மீது கண்டனங்கள் கிளம்பியுள்ளன. முன்னாள் பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி, பிரதமர் திடமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டின் ஊழல் எதிர்ப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கவேண்டும் என்றும் மூத்த அரசியல் செயலாளரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் எனவும் அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சினை பற்றி விளக்கிய பிரதமர் அன்வார், அவரது மூத்த அரசியல் செயலாளரைக் கண்டித்துள்ளதாகவும் கடிதம் அனுப்பப்பட்டதை ஆதரிக்கவில்லை எனவும் கூறினார். மேலும், கடிதத்தின் உள்ளடக்கம் தெளிவாக இல்லை எனவும் குறிப்பிட்ட எந்தவொரு செயல்பாட்டுக்கான அறிவுறுத்தலும் அதில் இல்லை என அவர் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்