மலேசிய ரிங்கிட் மதிப்பு இவ்வாண்டு வலுவடைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக அது ஏழு விழுக்காடு வலுவடைந்தது.
கடந்த வாரம் 13 மாதங்களில் இல்லாத அளவு வலுத்த ரிங்கிட்டின் மதிப்பு, இவ்வாண்டுக்கான இதர ஆசிய நிதியைப் பின்னுக்குத் தள்ளியது.
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பும் வலுத்தது. செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட் 3.18ஆக இருந்தது.
சிங்கப்பூர் வெள்ளிக்கும் ரிங்கிட்டுக்கும் இடையிலான மதிப்பு கிட்டத்தட்ட 2.8 விழுக்காடு சரிவு கண்டது.
இவ்வாண்டு ஜனவரியில் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 3.248 ரிங்கிட் கிடைத்தது.
உள்நாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தியதாலும் அணுகூலமான வெளிநாட்டுச் சூழல்களாலும் குறிப்பாக வலுவிழந்த அமெரிக்க டாலரின் மதிப்பாலும் மலேசிய ரிங்கிட்டுக்குச் சாதகமான நிலை ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறினர்.
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு எதிர்காலத்தில் இன்னும் வலுவடையும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தரமான வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு நிதி, நிதி உபரி ஆகியவை ரிங்கிட் வலுப்பெற காரணம் என்று நிபுணர்கள் சுட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
நிதிக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் மலேசியா வெளிப்படுத்திய உறுதியும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.
மலேசியாவின் மூன்றாம் காலாண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் 5.2 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
மலேசியாவின் ரிங்கிட் சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக வலுவடைந்ததற்குப் பிற நிகழ்ச்சிகளும் காரணமாகக் கூறப்படுகின்றனர்.
உதாரணமாக, அக்டோபர் 26ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை நடைபெற்ற ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தை மலேசியா முன்னெடுத்து நடத்தியது.

