புத்ராஜெயா: கடுமையான விதிமீறல்கள், தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தண்டனையாகப் பிரம்படி கொடுப்பது மலேசியப் பள்ளிகளில் தொடர்ந்து அவசியமாக இருப்பதாக அந்நாட்டுக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை ஊக்குவித்து, நல்ல மனிதர்களாக வளர்ப்பதே இலக்கு என்றார் அவர்.
இருப்பினும், பள்ளிகளில் அனைவருக்கும் ஏற்புடைய, பாதுகாப்பான சூழலை உருவாக்க கட்டொழுங்கு அவசியம் என்றார் அவர்.
மாணவர்களுக்குப் பிரம்படி கொடுத்துத் தண்டிக்கும் முறையை மலேசியப் பள்ளிகள் கடைப்பிடிப்பதால் கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுவதை அமைச்சர் ஃபட்லினா சுட்டினார்.
“மலேசியச் சட்டத்தின்கீழ் பிரம்படி கொடுத்து தண்டிக்கும் முறைக்கு அனுமதி உண்டு. பிரம்படி தண்டனையை நிறைவேற்றும்போது அதற்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றார் அவர்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு, சரியான முறையில் பிரம்படித் தண்டனைகளை நிறைவேற்றும் ஆசிரியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்வி அமைச்சுக்கு இருப்பதாக அவர் கூறினார்.
“ஆசிரியர்களின் நலனையும் கல்வி அமைச்சு காக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, மாணவர்களுக்குப் பிரம்படித் தண்டனை கொடுத்த இரண்டு ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது,” என்று திருவாட்டி ஃபட்லினா தெரிவித்தார்.
மாணவர்களுக்கான கட்டொழுங்கு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, பள்ளித் தலைமையாசிரியர்கள், பள்ளிக் கட்டொழுங்குக் குழுவினர் ஆகியோரின் பங்களிப்புகள் வலுப்படுத்தப்படும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது நடப்பில் உள்ள சட்டத்தின்கீழ், பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து மாணவர்களுக்குத் தண்டனையாகப் பிரம்படி, இடைநீக்கம் விதிக்கப்படலாம்.
விதிமீறல், தகாத செயல் மிகவும் கடுமையானதாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படலாம்.
“மாணவர்களைக் கண்டித்து அவர்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஆசிரியர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் வழங்கலாம். மாணவர்களுக்கான கட்டொழுங்கு விதிமுறைகளைக் கல்வி அமைச்சு மறுஆய்வு செய்கிறது,” என்று அமைச்சர் ஃபட்லினா தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேசியாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஃபட்லினா தெரிவித்துள்ளார்.
“பள்ளிகளில் கைப்பேசியைப் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதைத் தடுக்க அனைத்துப் பள்ளிகளும் சோதனை நடவடிக்கைகளை நடத்த வேண்டும்,” என்றார் அவர்.
தங்கள் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது அவர்களது நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் ஃபட்லினா கூறினார்.
“தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று பெற்றோருக்குத் தெரிய வேண்டும். பிள்ளைகள் அவர்களது அறைகளில் என்ன செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை பெற்றோர் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்,” என்று அமைச்சர் ஃபட்லினா வலியுறுத்தினார்.
வியாழக்கிழமையன்று (அக்டோபர் 23) புத்ராஜெயாவில் மூத்த செய்தியாளர்களுடனான சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி ஃபட்லினா இத்தகவல்களை வெளியிட்டார்.

