ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியக் கப்பலுக்கு அனுமதி எனத் தகவல்

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியக் கப்பலுக்கு அனுமதி எனத் தகவல்

1 mins read
8f73c998-b4f7-47e0-8515-7e6ceca9be18
சரக்குக் கப்பலுக்கு அனுமதி கிடைத்திருப்பது தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: ஹோர்முஸ் நீரிணையில் இதற்கு முன்னர் தேங்கிக் கிடந்த ஏழு மலேசிய வர்த்தகக் கப்பல்களில் ஒன்று நீரிணையைப் பத்திரமாகக் கடந்துசெல்ல அனுமதி வழங்கப்பட்டு, அக்கப்பல் தனது இறுதி இலக்கை நோக்கி வந்துகொண்டிருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) காலை அமைச்சு ஓர் அறிக்கையை வெளியிட்டது.

“சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பான கடல்துறைப் பயணம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை அனைத்துலகச் சட்டத்திற்கு இணங்கக் கடைப்பிடிக்க மலேசியா தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது.

“வட்டாரச் சவால்கள் மீது கவனம் செலுத்தவும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணவும் அரசதந்திர முயற்சி, பேச்சுவார்த்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மலேசியா மீண்டும் வலியுறுத்துகிறது,” என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, முதல் மலேசியக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டதாக மலேசியாவிலுள்ள ஈரான் தூதரகம் திங்களன்று தெரிவித்தது.

“ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது தோழர்களை மறக்காது என்று ஏற்கெனவே கூறியுள்ளோம்,” என்று அந்தத் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்