இந்தியா, சீனா மீது கவனம் செலுத்தும் மலேசியச் சுற்றுப்பயணத் துறை

இந்தியா, சீனா மீது கவனம் செலுத்தும் மலேசியச் சுற்றுப்பயணத் துறை

படம்: மலாய் மெயில்

28 Jun 2026 - 4:59 pm

2 mins read

ஈப்போ: மலேசியச் சுற்றுப்பயணப் பிரசார இயக்கத்தின் வாயிலாக இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனீசியா போன்ற சிறப்பாகச் செயல்படும் நிலையான சந்தைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மலேசியாவின் சுற்றுப்பயண, கலை மற்றும் கலாசார அமைச்சு தனது உத்தியை வலுப்படுத்தி வருகிறது.

பன்முகச் சந்தைப்போக்கை உறுதிசெய்ய ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற தொலைதூர நாடுகளின் சந்தைகளில் கவனம் செலுத்துவதும் அந்த உத்தியில் அடங்கும் என்று துணை அமைச்சர் சியூ சூன் மான் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் செயல்பாடுகளில் எழும் சவால்களையும் செலவு தொடர்பான அழுத்தங்களையும் கவனிக்க தமது அமைச்சு தொழில்துறை பங்காளிகளுடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈப்போவில் சனிக்கிழமை (ஜூன் 27) இரவு மலேசியக் கலாசார விழாவின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திரு சியூ, நாட்டின் சுற்றுப்பயணத் துறையின் வளர்ச்சி நேர்மறையான பாதையில் உள்ளதாகக் கூறினார்.

“இந்த ஆண்டு மே மாதம் வரை மலேசியாவுக்கு 17.5 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை அளித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் 16.9 மில்லியனைக் காட்டிலும் 3.4 விழுக்காடு அதிகம்,” என்று அவர் தெரிவித்தார்.

உலக அரங்கில் மலேசியாவின் புகழைப் பறைசாற்றி, சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்க கலை, கலாசாரத்தை சுற்றுப்பயணத் துறை பயன்படுத்தும் என்றும் குறிப்பாக, ‘மலேசிய சுற்றுப்பயணம்-2026’ பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் திரு சியூ கூறினார்.

“டாபுஸ் நடனம், லாபு சாயோங் மட்பாண்டக் கலை, தங்க நூல் பின்னல் கலை, ஈப்போவின் தனித்துவ உணவு கலாசாரம் போன்ற உள்ளூர் அம்சங்களுக்கு வலுசேர்க்கும்போது, ​​மதிப்புமிக்க, நிலையான ஒரு சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்படுகிறது. எனவே, கலாசாரச் சுற்றுலா சார்ந்த கூட்டு முயற்சி மிகவும் முக்கியமானது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
சுற்றுப்பயணம்மலேசியாவளர்ச்சி