கோலாலம்பூர்: டிஎச்இ என்றழைக்கப்படும் டைம்ஸ் உலக உயர்கல்விப் பல்கலைக்கழகத் தரப்பட்டியலில் முதன்முறையாக மலேசியப் பல்கலைக்கழகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
200 கல்வி நிலையங்கள் இடம்பெறும் அப்பட்டியலில் மலேசியாவின் யுனிவர்சிட்டி மலாயா என்றழைக்கப்படும் மலாயா பல்கலைக்கழகம் 194வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியல் 2027ஆம் ஆண்டுக்கானதாகும்.
இது, மலேசியாவின் ஆகப்பழைமையான பல்கலைக்கழகமான மலாயா பல்கலைக்கழகம் கண்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றமாகும். 2023ல் அது 351-400 இடையே முடித்தது என்று பெர்னாமா ஊடகம் தெரிவித்தது.
டைம்ஸ்ட் பட்டியலில் தாங்கள் பிடித்துள்ள இடம், உலகளவில் தரத்தின்படி பட்டியலிடப்பட்டுள்ள 2,297 பல்கலைக்கழகங்களில் முன்னணி 8.5 விழுக்காட்டுப் பல்கலைக்கழகங்களில் மலாயா பல்கலைக்கழகம் இருப்பதாக அது புதன்கிழமை (செப்டம்பர் 30) அறிக்கை மூலம் தெரிவித்தது. மேலும், டிஎச்இ பட்டியலில் மலேசியாவின் ஆகச்சிறந்த பல்கலைக்கழகம் என்ற அங்கீகாரத்தையும் அது தக்க வைத்துக்கொண்டுள்ளது.
