பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பருவமழை எதிர்பார்க்கப்படுவதால் காய்கறிகளை பயிரிட்டு வரும் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
காய்கறி விநியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பது அதன் முக்கிய நோக்கம்.
காய்கறி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவரான லிம் செர் குவீ, காய்கறி விவசாயிகள் வரவிருக்கும் பருவமழையை சமாளிக்க சாகுபடியை 20 விழுக்காடு அதிகரிக்க தொடங்கியுள்ளனர் என்றார்.
விவசாயிகள் எப்போதும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 2024ஆம் ஆண்டின் பருவநிலை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கணிக்க முடியாததாக இருக்கிறது.
உதாரணமாக, ஜூன் முதல் ஜூலை வரை வறண்ட காலமாக இருக்கும். ஆனால் 2024ஆம் ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்யலாம்.
2024ஆம் ஆண்டில் பலத்த காற்றும், கனமழையும் காய்கறி நிலங்களை அழித்துவிடாது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருப்பதாக திரு லிம் கூறினார்.
“தற்போதைய வானிலை, மழை மற்றும் கடுமையான சூரிய ஒளி ஆகியவற்றுக்கு இடையே காய்கறிகளை பூச்சிகள் மற்றும் நோய்கள் மாறி மாறி தாக்குவதை எளிதாக்குகிறது. சில காய்கறி வகைகள் பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
“இவ்வாண்டு இறுதியில் தேவைக்கு ஏற்ப காய்கறிகளின் விலை சற்று அதிகரிக்கலாம். ஆனால் காய்கறிகள் வரத்து தொடர்ந்து இருக்கும். அதில் எந்தவிதத் தட்டுப்பாடும் இருக்காது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கேமரன் மலை காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான லாவ் வெங் சூவ், காய்கறிகள் அழுகுவதைத் தடுக்க பூஞ்சை, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த விவசாயிகள் அதிக முன்னுரிமை அளித்துள்ளனர் என்று கூறினார்.
“கேமரன் மலையில், கூடாரங்கள் மற்றும் பசுமை கூடங்களில் பயிரிட்டு வருகிறோம். பலத்த காற்று வீசினால் காய்கறிகள் நாசமாகிவிடும்,” என்று திரு லாவ் குறிப்பிட்டார்.

