சிங்கப்பூர் நிரந்தரவாசம் பெறும் ஆசையில் $238,500 இழந்த மலேசிய மூதாட்டி

சிங்கப்பூர் நிரந்தரவாசம் பெறும் ஆசையில் $238,500 இழந்த மலேசிய மூதாட்டி

கோப்புப் படம்: சாவ்பாவ்

24 Sep 2026 - 6:35 pm

2 mins read

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெற்றுத் தர உதவுவதாக உறுதியளித்து மலேசியாவில் 62 வயது மூதாட்டியிடம் 762,000 ரிங்கிட் (S$238,500) மோசடி செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் தொடர்பாக ஜோகூர் பாரு தென்மாவட்டக் காவல்துறைத் தலைவர் அஸ்ருல் ஹிஷாம் முகம்மது ஷஃப்பீ செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சிங்கப்பூரில் நிரந்தரவாசம் பெற்றுத்தர உதவி செய்யப்படும் என்று 2025 டிசம்பரில் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைக் கண்டு, அதில் இருந்த எண்ணை அந்தப் பெண் தொடர்புகொண்டதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுமுனையில் பேசியவர் நிரந்தரவாசச் சேவை உதவிக் கட்டணமாக $300 என்று தொடக்கத்தில் கூறியதாகவும் பின்னர் அந்த நபர் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு இவ்வாண்டு மே 5 முதல் ஆகஸ்ட் 31 வரை 123 முறை அவர் பணம் அனுப்பி ஏமாந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

762,700 ரிங்கிட் அனுப்பிய பின்னரும் தொடர்ந்து பணம் அனுப்புமாறு சொன்னதால் சந்தேகமடைந்த பெண், அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இழந்த பணத்தை அந்தப் பெண் திரும்பப் பெற்றாரா என்ற விவரமும் தரப்படவில்லை.

மலேசியாவில் மோசடிக் குற்றத்துக்கு பத்தாண்டு வரையிலான சிறை, அபராதம், பிரம்படி ஆகியன தண்டனைகளாக விதிக்கப்படலாம்.

குடிநுழைவு ஆவணங்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தருவதாக சமூக ஊடகங்களில் உறுதியளிக்கப்படுவதை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் குறிப்பாக, சரிபார்க்கப்படாத தனிநபர் அல்லது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு சொல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மலேசியர்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்