புத்ரஜெயா: மலேசியத் தாய்மாருக்கு வெளிநாட்டில் பிறந்த 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
திங்கட்கிழமையன்று (மார்ச் 10) அந்நாட்டின் கூட்டரசு நீதிமன்றத்தில், குடும்ப ஆதரவு அமைப்புகளுக்கும் கூட்டரசாங்கத்துக்கும் இடையே நான்கு ஆண்டுகளாக நடந்துவந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அவ்விரு பிரிவினருக்கும் இடையே சமரசம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டது.
மலேசியத் தாய்மார்கள் சிலர் வெளிநாட்டில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதால் குடும்ப ஆதரவுக் குழுக்களுடன் இணைந்து 2020ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மலேசிய அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர்.
அண்மையில் திருத்தப்பட்ட அரசியலமைப்பு மசோதா 2024-ன் கீழ் வராத மலேசிய தாய்மார்களின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் வாழ்க்கையில் இத்தீர்ப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குடும்ப ஆதரவு அமைப்பு ஒன்று மார்ச் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி, மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் பிள்ளைகள் திருத்தப்பட்ட அரசியலமைப்பு மசோதா 2024-ன் கீழ் குடியுரிமை பெற தகுதியுடையவர்களாக அனுமதிக்கும் சட்டத்தை மலேசியா நிறைவேற்றியது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர்.
“ஆனால், சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்குமுன்பு பிறந்த பிள்ளைகளுக்கு அச்சட்டம் பொருந்தாது. புதிய மசோதா நிறைவேற்றப்படுவதற்குமுன் மலேசியத் தாய்க்குப் பிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருந்தது,” என அந்த அமைப்பு தன் அறிக்கையில் குறிப்பிட்டதாக ‘சிஎன்ஏ’ கூறியது.