மலேசிய ஊழியர்களின் ஊதியம் $217.45 பில்லியனை எட்டி சாதனை

மலேசிய ஊழியர்களின் ஊதியம் $217.45 பில்லியனை எட்டி சாதனை

2 mins read
a237921d-05a9-41ab-8c7e-66d60ecaf3ea
ஊதியமாகவும் இதர இழப்பீட்டுத் தொகையாகவும் மலேசிய ஊழியர்கள் 2025ஆம் ஆண்டில் $217.45 பில்லியன் தொகையைப் பெற்றனர். - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசிய ஊழியர்கள் கடந்த ஆண்டில் ஊதியமாகவும், இதர இழப்பிட்டுத் தொகையாகவும் சாதனை அளவாக $217.45 பில்லியனைப் பெற்றனர்.

அதன் விவரங்களை ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எனும் மலேசிய ஊடகம் புதன்கிழமை (ஜூலை 29) வெளியிட்டது.

அங்குள்ள ஊழியர்கள் பெற்ற தொகை, 2025ஆம் ஆண்டில் மலேசியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கு என அந்நாட்டுப் புள்ளிவிவரத்துறை தெரிவித்தது.

வளர்ந்துவரும் மலேசியப் பொருளியலின் வெளிப்பாடாக, புள்ளி விவரத்துறை வெளியிட்ட விகிதம் 2024ஆம் ஆண்டைவிட 5.8 விழுக்காடு அதிகம் எனவும் தெரிகிறது.

அதேபோல தொழிலாளர்களில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்கு 33.9 விழுக்காடு ஏற்றம் கண்டது. அது அதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டைவிட 0.3 விழுக்காடு அதிகமாகும்.

மலேசியாவின் வழக்கமான ஜிடிபி $642.5 பில்லியன் என்ற அளவை 2025ல் எட்டியுள்ளது. ஆண்டு அடிப்படையில் அது 4.8 விழுக்காடு வளர்ச்சி என்று பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர ஏறத்தாழ அனைத்து பொருளியல் துறைகளும் அந்த வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளன. அவற்றில் சேவைத் துறையும் உற்பத்தித் துறையும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அவற்றில் சுரங்கத் துறையும் கல் ‘குவாரி’த் துறையும் தொடர்ந்து வீழ்ச்சிக்கு வித்திட்டன.

இதற்கிடையில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிய பிறகு நிறுவனங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வருமானத்தைக் குறிக்கும் மொத்த உபரித்தொகை, $398.7 பில்லியன் என்ற அளவை எட்டியது. அது, மலேசியாவின் ஜிடிபி எண்ணிக்கையில் மிகப்பெரிய அங்கம் வகித்தது.

இருப்பினும் 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025ல் அந்த உபரித்தொகையின் ஜிடிபி பங்கு விகிதம் 1.6 விழுக்காடு குறைந்து 62 விழுக்காடானது.

நிகர வரிகள் ஜிடிபியில் 4.1 விழுக்காடு அங்கம் வகித்து, 2024ஆம் ஆண்டைவிட 2.8 விழுக்காடு ஏற்றம் கண்டன. அதன் மதிப்பு $17.18 பில்லியனிலிருந்து $26.43 பில்லியன் என உயர்ந்தது.

உற்பத்தியிலும் இறக்குமதியிலும் 12.9 விழுக்காடு வரிகள் ஏற்றமடைந்து நிகர வரிகள் 53.7 விழுக்காடு வளர்ச்சியடைந்தன என்று புள்ளிவிவரத்துறை குறிப்பிட்டது.

பெட்ரோலியம், டீசல் போன்ற எரிபொருள்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளால் மானியங்களின் விகிதம் 36.5 விழுக்காடு குறைந்தது எனவும் துறை விளக்கியது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமொத்த உள்நாட்டு உற்பத்திவருமானம்ஊதியம்சம்பளம்உபரிஊழியர்