விஇபி கட்டணம் உயர்வதால் மலேசியர்கள் சிங்கப்பூர் வர யோசிப்பதாகத் தகவல்

விஇபி கட்டணம் உயர்வதால் மலேசியர்கள் சிங்கப்பூர் வர யோசிப்பதாகத் தகவல்

2 mins read
35198c3f-4ce9-48d0-a134-f448d952d4cb
இலவச வாகன நுழைவு அனுமதிச் சலுகையும் அடுத்த ஆண்டு நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: த ஸ்டார்

ஜோகூர் பாரு: வாகன நுழைவு அனுமதிக் கட்டணத்தை (விஇபி) அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சிங்கப்பூர் உயர்த்தவிருக்கும் நிலையில் சிங்கப்பூருக்கு வந்து செல்வது பற்றி மலேசியர்கள் யோசிப்பதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவிக்கிறது.

சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட கார்களுக்கு தற்போது தினமும் 35 வெள்ளியும் (109 ரிங்கிட்) மோட்டார் சைக்கிள்களுக்கு 4 வெள்ளியும் (12.50 ரிங்கிட்) வாகன நுழைவு அனுமதிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

2027 ஜனவரிமுதல் வெளிநாட்டு கார்களுக்கு 50 வெள்ளியும் (156.20 ரிங்கிட்) மோட்டார்சைக்கிள்களுக்கு 7 வெள்ளியும் (21.80 ரிங்கிட்) கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

ஜோகூர் பாலம் வழியாகவும் இரண்டாம் பாலம் வழியாகவும் மேற்கொள்ளப்படும் சரக்குப் போக்குவரத்துக்கும் கட்டணங்கள் மாறுபடும். மாதம் ஒன்றுக்கு சரக்கு வாகன அனுமதிக் கட்டணமாக தற்போது 40 வெள்ளி (124 ரிங்கிட்) வசூலிக்கப்படுகிறது. இது 70 வெள்ளியாக (127 ரிங்கிட்) உயரும்.

கட்டண உயர்வுடன் இலவச நுழைவு சலுகையும் அடுத்த ஆண்டு நீக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் பத்து நாள் வாகன நுழைவு அனுமதியை வெளிநாட்டு வாகனங்கள் இலவசமாகப் பெறும் நடைமுறை தற்போது நடப்பில் உள்ளது. அத்துடன் மாலை 5 மணிக்கு மேல் சிங்கப்பூர் வந்துவிட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்குள் வெளியேறிவிடும் வாகனங்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்தச் சலுகைகள் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘த ஸ்டார்’ இணையச் செய்தியிடம் பேசிய இங், 37, என்று மட்டும் தமது பெயரைச் சொல்லிக்கொண்ட ஒருவர், கட்டணங்கள் உயர்வதால் அவசியமற்ற சிங்கப்பூர் பயணங்களைத் தவிர்க்கப்போவதாகக் கூறினார்.

“எனது மனைவி, அத்தை, சித்தி ஆகியோர் சிங்கப்பூரில் வேலை செய்வதால் அவர்களை அழைத்து வரவும் திரும்பக் கொண்டுபோய் விடவும் வாரந்தோறும் சிங்கப்பூருக்கு வாகனம் ஓட்டிச் செல்வது வழக்கம். செலவு அதிகரிக்கும் என்பதால் இனிமேல் வார நாள்களில் சிங்கப்பூர் செல்வதைத் தவிர்க்கப்போகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்