கிள்ளான்: மலேசியர்கள் தங்களின் சொல்லிலும் செயலிலும் எச்சரிக்கை காக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் (சமய விவகாரங்கள்) டாக்டர் முகம்மது நயீம் மொக்தார் அறிவுறுத்தியுள்ளார்.
பல இன மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தும் சூழல்களைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இனம் தொடர்பான விவகாரங்களில் மதிப்பும் புரிந்துணர்வும் இன்றியமையாதவை என்று சுட்டினார் அவர்.
அண்மையில் இன ரீதியாக ஒருவரைப் புண்படுத்தும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது தொடர்பாக அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
செப்பாங் பகுதியில் கோத்தா வாரிசானில் உள்ள ஒரு தெருவோரக் கடையில் சோளம் சுட்டு விற்று வந்த ஒரு கடைக்காரர், இந்தியர்களுக்கு விற்பதாக இல்லை எனக் கூறும் அட்டை ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தார்.
அதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக வெடித்துள்ளது.
அவ்வழியாகச் சென்ற ஓர் இந்தியப் பெண்மணி, காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இனவாதச் சிந்தனையை இதுபோன்ற செயல்கள் ஏற்படுத்தலாம் என்று மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் எம்.சரவணன் எச்சரித்துள்ளார்.
கடைக்காரரின் நடத்தையை வெகுவாகச் சாடிய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டாகாங், தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றார்.

