கோலாலம்பூர்: மலேசியாவில் நீடிக்கும் கடும் வெப்பம் காரணமாக மலேசியர்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்பம் காரணமாக நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை எழுந்துள்ளது. அதனால், அத்தியாவசியத் தேவைகளுக்கே நீரைப் பயன்படுத்தும் முறைகளை மலேசியர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
குறிப்பாக, அடிக்கடி கார் கழுவும் போக்கைக் கைவிட்டு தேவை ஏற்படும்போது மட்டும் கழுவும் பழக்கத்திற்கு அவர்கள் மாறி வருகின்றனர்.
கோலாலம்பூரின் தெற்கு நகரான சலாக் தெலானில் உள்ள கார் கழுவும் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதை அந்த நிலையத்தின் ஊழியர் த ஸ்டார் ஊடகத்திடம் கூறினார்.
முன்பு வாரந்தோறும் தங்கள் கார்களைக் கழுவி வந்த பெர்லிஸ், கெடா மற்றும் மலாக்காவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், இப்போது மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வருவதாக அவர் கூறினார்.

