மலேசியர்கள் 60 வயதிற்குப் பிறகும் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்: அன்வார்

மலேசியர்கள் 60 வயதிற்குப் பிறகும் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்: அன்வார்

படம்: பெர்னாமா

29 Sep 2026 - 5:56 pm

2 mins read

கோலாலம்பூர்: 2048ஆம் ஆண்டிற்குள் முதியோர் அதிகம் வசிக்கும் நாடாக மலேசியா மாறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போதுமான ஓய்வூதிய சேமிப்பை உறுதி செய்வதில் மட்டுமல்லாமல், 60 வயதிற்குப் பிறகும் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

மலேசியாவில், தனியார் துறைக்கான குறைந்தபட்ச ஓய்வு வயது, அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு வயது ஆகிய இரண்டுமே தற்போது 60 ஆக உள்ளன.

திரு அன்வார் தமது உரையில், 60 வயதுக்குப் பிறகும் பணியாற்ற விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால், குறைந்தபட்ச அல்லது கட்டாய ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

“அடிப்படை அளவை உயர்த்துவது என்பது பணியின் ஒரு பகுதி மட்டுமே. நீண்ட ஆயுளைச் சுயசார்பு, சமூகத் தொடர்புகள், வாழ்வின் நோக்கத்துடனும் வாழ்வதை உறுதி செய்வதன் மூலம், நாம் மூத்தோர் திறனின் உச்ச வரம்பையும் உயர்த்த வேண்டும்.

“60 வயதைத் தாண்டியும் தொடர்ந்து வேலை செய்யத் திறன் உள்ளவர்கள், அதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். இது விருப்பம் பற்றியது, கட்டாயம் அல்ல,” என்று அவர் கோலாலம்பூரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சமூக நல்வாழ்வு மாநாட்டில் தமது உரையில் கூறினார்.

பிரதமரின் உரையை இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிசான் வாசித்தார்.

ஓய்வுக்காலத்திற்குப் போதுமான சேமிப்பு, நிலையான வருமானம் உள்ளிட்ட, தமது உரையில் அவர் முன்பு கூறிய கருத்துகளையே அன்வார் தமது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகக் குறிப்பிடுகிறார்.

60 வயதிற்கு மேலும் பணிபுரிய அனுமதிப்பது அல்லது அதுபோன்ற வயதுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவது, “அனுபவத்தைத் தக்கவைத்து, நிறுவனங்களை வலுப்படுத்தி, மக்களின் சூழ்நிலைகளை மதிக்கும் வகையில் அவர்கள் பொருளியல் ரீதியாகத் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்,” என்று திரு அன்வார் சுட்டிக்காட்டினார்.

பொருளியல் புள்ளிவிவரங்களில் இடம்பெறாவிட்டாலும், முதியவர்களால் சமூகத்திற்குத் தொடர்ந்து மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

“அனுபவம், தீர்ப்பளிக்கும் திறன், திரட்டப்பட்ட அறிவு ஆகியவை சமூகத்திற்கு மதிப்புமிக்க சொத்துகளாகத் திகழ்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
கட்டாய ஓய்வுநல்வாழ்வுபொருளியல்