கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தைப் பெற்றோரும் கல்விக் குழுக்களைச் சேர்ந்தோரும் வரவேற்றுள்ளனர்.
அதற்கெனத் தொடங்கப்பட்டுள்ள நடுவர்மன்றத்தையும் அவர்கள் வரவேற்றனர். ஆயினும், பிள்ளைகளின் நடவடிக்கைகளுக்குப் பெற்றோரைப் பொறுப்பேற்கச் செய்யும் விதிமுறை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
புதிய சட்டம் இம்மாதம் 16ஆம் தேதி நடப்புக்கு வந்தது. சென்ற ஆண்டு மலேசியாவில் அந்தப் பிரச்சினையால் ஏறக்குறைய 3,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
“பிள்ளைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும் பகடிவதையால் உளவியல் மற்றும் கல்வி ரீதியான, உணர்வுபூர்வமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை அது அங்கீகரிப்பதாலும் புதிய சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று கல்விக்கான பெற்றோர் செயல்முறைக் குழுவின் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம் கூறினார்.
உலக அளவில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே பகடிவதை விகிதம் ஆக அதிகமாக இருப்பது மலேசியாவில்தான் என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட கல்விச் சாதனை மதிப்பீட்டிற்கான அனைத்துலகச் சங்கம் 2023ஆம் ஆண்டு அந்த ஆய்வை வெளியிட்டது.
இப்சோஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 400 மலேசியர்களில் ஏறக்குறைய 260 பேர் அதாவது 65 விழுக்காட்டினர், பள்ளிகளில் பகடிவதைக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பகடிவதைக்கு எதிரான புதிய நடுவர்மன்றத்தையும் மலேசியா நிறுவியுள்ளது.
அதில் 58 வல்லுநர்கள் இடம்பெற்றிருப்பார்கள். பள்ளி நிலையில் தீர்வுகாண முடியாத சம்பவங்களை அவர்கள் கையாள்வர்.
தொடர்புடைய செய்திகள்
நடுவர்மன்றத்தால் பகடிவதைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படும் சிறியவர்களின் பெற்றோரும் இனிமேல் பிள்ளைகளின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பது புதிய சட்ட விதிமுறைகளில் முக்கியமான ஓர் அம்சம். அத்துடன் பெற்றோர் கூடுதல் நீதிமன்ற நடைமுறைகளையும் அபராதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
“இருப்பினும், இந்தச் சட்டபூர்வப் பொறுப்பை எச்சரிக்கையுடன் அணுகவேண்டும்,” என்று திருவாட்டி நூர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“சிக்கலான சமுதாய, மின்னிலக்கச் சூழலில், பெற்றோர் அனைவருக்கும் பிள்ளைகளின் செயல்களில் கட்டுப்பாடு இருப்பதில்லை,” என்பதையும் அவர் சுட்டினார்.

