கோலாலம்பூர்: மலேசியா, அதன் எரிசக்தித் திறனை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டு செயல் திட்டத்தை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) புதுப்பித்தது. இதன் மூலம் சுமார் 21.5 பில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பை இலக்காகக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட தேசிய எரிசக்தித் திறன் செயல் திட்டம், 2035 வரை செயல்படுத்தப்படும் என்றும் இது எரிசக்தித் தேவையை 11.6 விழுக்காடு குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் எரிசக்தி மாற்றம், நீர் சுத்திகரிப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வர்த்தகக் கணிப்புகளுடன் ஒப்பிடும்போது, இது 815,382 ‘டெராஜூல்’ அளவிலான ஒட்டுமொத்த எரிசக்தி சேமிப்பிற்கு வழிவகுக்கும். இது 26.1 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பிற்குச் சமமாகும் என்றும் அந்த அறிக்கை கூறியது.
2016க்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் இயங்கிய முதல் செயல் திட்டம், 60,886 ஜிகாவாட்-மணிநேரம் அல்லது தோராயமாக 16.1 பில்லியன் ரிங்கிட் (US$3.9 பில்லியன்) மின்சார சேமிப்பை வழங்கியது. அதன் இலக்கான 52,233 ஜிகாவாட் மணிநேரத்தைத் தாண்டியது என்று பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர், திட்ட வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
இது 35.6 மில்லியன் டன் கரியமில வாயுவுக்குச் சமமான குறைப்புக்கு ஈடானது என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பின் ஏற்றம் காரணமாக மின்சாரத்திற்கான தேவை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், மலேசியா, நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஆற்றல் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தரவு மைய நடுவமாக விளங்கும் மலேசியா, அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் பொருளியல் முழுவதும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 45 விழுக்காடு குறைப்பதற்கும், 2050ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய வெளியேற்றத்தை அடைவதற்கும் எடுத்த உறுதிமொழியின் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டில், மிகப்பெரிய எரிசக்தி பயனீட்டாளர் மின்சார சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று மலேசியா ஒரு சட்டத்தை இயற்றியது என ராய்ட்டர்ஸ் கூறுகிறது.


