மலேசியாவில் நடப்புக்கு வந்துள்ள பகடிவதை எதிர்ப்புச் சட்டம்

2 mins read
b3c4525f-84ea-4814-adfc-f5eb1cf27328
பகடிவதைக்கு ஆளாகி மாண்ட 13 வயதுச் சிறுமி ஸாரா கைரினாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கோலாலம்பூரில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடந்த பேரணியில் பங்கெடுத்த ஒரு பெண் பதாகையைப் பிடித்திருக்கும் காட்சி. - இபிஏ

கோலாலம்பூர்: மலேசியாவில் பகடிவதை எதிர்ப்புச் சட்டம் நடப்புக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து குற்றம் புரிவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

பகடிவதைப் பிரச்சினை பொதுமக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில் அதன் தொடர்பான சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஜூலை மாதம் நடப்புக்கு வந்தன.

துன்புறுத்தல், மிரட்டல், பகடிவதை, அவமதித்தல், அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் முதலிய குற்றங்கள் திருத்தப்பட்ட சட்டங்களின் வழி கையாளப்படும்.

ஒருவேளை தூண்டுதலுக்கு ஆளானவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றால் அல்லது மாய்த்துக்கொண்டால் அத்தகைய சம்பவங்களிலும் புதிய சட்டங்களைப் பயன்படுத்த முடியும்.

அதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

அண்மைச் சட்டத் திருத்தங்கள் இந்த விவகாரத்தை அரசாங்கம் கடுமையாகக் கையாளவிருப்பதைப் பிரதிபலிப்பதாக வழக்கறிஞர் முகம்மது அக்ரம் அப்துல் அஸிஸ் தெரிவித்தார். ஒருவரின் அனுமதியின்றி அவருடைய தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் வெளியிடுவது இனிமேல் கடும் குற்றமாகப் பார்க்கப்படும் என்பதை அவர் சுட்டினார்.

“இணைய மிரட்டல்களைக் கையாள இத்தகைய சட்டத் திருத்தங்கள் முக்கியம். இணைய மிரட்டல்கள் உடல் ரீதியாகத் தீங்கிழைப்பது இல்லை. ஆனால் அவற்றால் ஒருவரின் உணர்வுகளுக்கும் மனநலத்துக்கும் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்,” என்றார் திரு முகம்மது அக்ரம்.  

பள்ளிகளில் சட்டக் கல்விப் பாடங்களைச் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பகடிவதை என்பது சாதாரணமானது அன்று என்றும் மாறாக அது கடும் குற்றம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் குற்றவியல் ஆய்வுத் துறையில் பணிபுரியும் முனைவர் ஹேஸ்ரீனா பேகம் அப்துல் ஹமிது திரு முகம்மது அக்ரமின் கருத்தை ஆதரித்தார்.

கடும் தண்டனைகள் மட்டும் போதுமானவையாக இருக்கமாட்டா என்று அவர் சொன்னார். தொடர் விழிப்புணர்வு இயக்கங்களும் பள்ளிகளின் பங்கும் சமூகத்தின் தலையீடும் அவசியம் என்றார் முனைவர் ஹேஸ்ரீனா.

“பகடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாம் அதனை மாற்றி, ஒரு குற்றமாகக் கையாள வேண்டும். வாழ்க்கையின் இயற்கையான ஓர் அங்கமாக அது பார்க்கப்படக்கூடாது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்