புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவாக ஜனநாயகச் செயல் கட்சி (டிஏபி) வாக்களித்துள்ளது.
முதன்முறையாகப் புத்ராஜெயாவில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெற்ற அதன் தேசிய மாநாட்டில், அந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. அங்கு 4,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கூடினர்.
அந்த வாக்கெடுப்பில், அமைச்சரவைக்கு ஆதரவாக 1,857 வாக்குகளும் அதற்கு எதிராக 242 வாக்குகளும் 7 செல்லாத வாக்குகளும் பதிவாயின. மொத்தம் 2,223 பேராளர்கள், அதாவது 52.1 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
நாட்டின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயா அந்த மாநாட்டிற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, மத்திய அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற கட்சித் தலைமைத்துவத்தின் உறுதியான முடிவைப் பிரதிபலித்தது.
அந்த முடிவின் மூலம், திரு அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்குத் தங்களின் முழு கடப்பாட்டை வழங்குவதை ‘டிஏபி’ மறு உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு ஆட்சியின் வீழ்ச்சியைச் சந்திக்கக்கூடிய, முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய நிலையில் இருந்த பிரதமர் அன்வாருக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை அந்த முடிவு தணித்துள்ளது.
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு முன்னர் நடத்தப்படவேண்டும்.
நாடாளுமன்றத்தில் 40 இடங்களைக் கொண்டுள்ள சீனர்களின் ஆதிக்கம் நிறைந்த ‘டிஏபி’, ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாகும். அதனால், திரு அன்வார் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டு பதவியில் நீடிப்பதற்கு அக்கட்சியின் முடிவு மிகவும் முக்கியமானதாகும்.
திரு அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி சாபா, ஜோகூர் மாநிலங்களில் ஏற்கெனவே தோல்விகளைச் சந்தித்த நிலையில், அண்மையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் ஆட்சியை இழந்தது.
தேசிய முன்னணி - பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி, மும்முனைப் போட்டியைத் தவிர்த்ததோடு, ‘மலாய் ஒற்றுமை’ பிரசாரத்தை முன்னிறுத்தி அந்த மாநிலத்தைக் கைப்பற்றியது.
பக்கத்தான் ஹரப்பானின் பின்னடைவுகளை மேலும் அதிகமாக்கும் வகையில், அந்தப் புதிய கூட்டணி அதன் முக்கியத் தலைவர்களுக்குப் பலத்த அடியைக் கொடுத்தது.
போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், மூன்று முறை தொடர்ந்து வெற்றிபெற்ற தமது சென்னா தொகுதியை இழந்தார். அதே போல், தற்காலிக முதலமைச்சர் அமினுடின் ஹாருன் அவரது சட்டமன்றத் தொகுதியை இழந்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சாபா மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட எட்டுத் தொகுதிகளிலும் ஒன்றைக்கூட கைப்பற்றத் தவறியதை அடுத்து, திரு அன்வாரின் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பது குறித்துக் கட்சி தழுவிய வாக்கெடுப்பை நடத்த ‘டிஏபி’ அழைப்பு விடுத்திருந்தது.


