கடந்த ஆண்டின் மலேசியப் பொருளியல் வளர்ச்சி 4.9 விழுக்காட்டைத் தொட்டது

2 mins read
a38c715c-6579-4c77-b53f-e24e715353e1
அமெரிக்காவின் புதிய வரிகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மீறி மலேசியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கண்டது. - படம்: இபிஏ

கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் கடந்த ஆண்டு நான்காம் காலாண்டில் 5.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டுப் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. ஓராண்டில் பதிவான ஆக விரைவான வளர்ச்சி இது என்று அது குறிப்பிட்டது.

மூன்றாம் காலாண்டுடன் ஒப்புநோக்க அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையிலான வளர்ச்சி இன்னும் துரிதமாக இருந்தது. மூன்றாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 5.2 விழுக்காடாக இருந்தது.

2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான 5.9 விழுக்காட்டு வளர்ச்சியுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் பதிவான வளர்ச்சி இன்னும் வேகமானது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

மலேசியப் பொருளியல் வளர்ச்சி கடந்த ஆண்டு 4 விழுக்காட்டிலிருந்து 4.8 விழுக்காட்டுக்கு இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு பதிவான 5.1 விழுக்காட்டு வளர்ச்சியைவிட கடந்த ஆண்டின் வளர்ச்சி மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், முக்கியப் பொருளியல் துறைகளான சேவை, உற்பத்தி, கட்டுமானம் ஆகிய துறைகளால் 2025ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் துரிதமான வளர்ச்சி பதிவானதாகப் புள்ளிவிவரத் துறை சொன்னது.

கடந்த ஆண்டின் நாலாம் காலாண்டில் பதிவான வளர்ச்சிக்கு தொடர்ந்து வலுவடைந்துவரும் உள்நாட்டுத் தேவையும் ஒரு காரணம் என்று புள்ளிவிவரத் துறைத் தலைவர் முகமது உசிர் மஹிதின் குறிப்பிட்டார்.

அமெரிக்க வரிகளால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடையிலும் அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மலேசிய ஏற்றுமதியின் வளர்ச்சி வலுவாக இருந்தது என்றனர் நிபுணர்கள்.

ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 15.7 விழுக்காடு வளர்ச்சி கண்டன. நவம்பரில் அது 7 விழுக்காடாகப் பதிவானது.

அமெரிக்கா மலேசியாவிலிருந்து வரும் அனைத்து இறக்குமதிகள்மீதும் கடந்த ஆண்டு 19 விழுக்காட்டு வரியை விதித்தது.

அனைத்துலக வர்த்தகம் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுவரும் நிலையில் மலேசிய அரசாங்கம் இவ்வாண்டுக்கான வளர்ச்சி 4 விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காட்டுக்கு இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைத்துள்ளது.

இனிவரும் மாதங்களிலும் பொருளியல் வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்