கோலாலம்பூர்: மலேசியா 2024ஆம் ஆண்டு பொருளியலில் சாதித்ததின் அடிப்படையில் இந்தப் புத்தாண்டிலும் அதன் வளர்ச்சி தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகபட்சமாக 6 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நிச்சயமற்ற உலகச்சூழல் நீடிக்கிற நிலையிலும் முக்கியமான சில காரணிகள் மலேசியப் பொருளியலுக்கு ஏற்றம் தரும் என்கின்றனர் அவர்கள்.
வலுவான உள்நாட்டு நுகர்வு, முக்கிய ஏற்றுமதித் துறைகள், நீடித்து நிலைத்திருப்பதற்கான முயற்சிகள், ஒரு முதலீட்டு மையமாக வளர்ச்சியில் நாட்டுக்கு இருக்கும் பங்கு போன்றவை அந்தக் காரணிகள்.
ஜுவாய் ஐக்கியூ (Juwai IQI) ஆய்வு அமைப்பின் அனைத்துலகப் பொருளியலாளர் ஷான் சயீது, மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 5 முதல் 6 விழுக்காடு வரை வளர்ச்சி காணக்கூடும் என்று முன்னுரைத்து உள்ளார்.
நுகர்வு, முதலீடு ஆகியவற்றின் நல்ல நிலைமை இந்த ஆண்டும் வலுவாகத் தொடரும் என்பது அவரது கணிப்பு.
அதேநேரம், உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாகச் செய்யப்படும் முதலீடுகளை ஊக்குவிக்க அரசாங்கம் எடுத்துவரும் துடிப்புமிக்க முயற்சிகளை அவர் பாராட்டினார்.
வெற்றிகரமான பகுதி மின்கடத்தி சுற்றுச்சூழலுக்கு மத்தியில் வட்டாரத் தரவு மையம் மற்றும் தொழில்நுட்ப மையம் என மலேசியா வேகமாக மாறி வருவதும் பொருளியல் ஊக்குவிப்பு முயற்சிகள் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மிகவும் வலுவாக இருப்பதால்தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் நம்மால் ஈர்க்க முடிகிறது,” என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தனியார் நுகர்வும் அடுத்தடுத்து முன்னேற்றம் காணும் தனியார் முதலீட்டு முறையும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 விழுக்காடு பங்களிக்கின்றன.
உயரும் வருவாய் அடிப்படையில் நீடித்து நிலைக்கும் பயனீட்டாளர் நம்பிக்கை, குறைவான வேலையின்மை, அரசாங்க வருவாய் உதவி இலக்குத் திட்டங்கள் ஆகியன தனியார் நுகர்வுக்குக் கைகொடுப்பதாக மற்றொரு நிபுணரான பேராசிரியர் டாக்டர் யீ கிம் லெங் தெரிவித்து உள்ளார்.
சன்வே பல்கலைக்கழகத்தின் தென்கிழக்காசிய ஜெஃப்ரி சீ ஆய்வுக்கழக பொருளியல் ஆய்வுத் திட்ட இயக்குநர் அவர்.

