கோலாலம்பூர்: எதிர்த்தரப்புத் தலைவர் என்னும் அங்கீகாரத்தைக் கட்டிக்காக்க முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் போராடி வருகிறார்.
தமது தலைமைக்கு எதிராக பெர்சத்து கட்சியில் ஏற்கெனவே சிலர் கிளம்பியிருக்கும் வேளையில், அடுத்தகட்ட முயற்சியில் அவர் இறங்கி இருப்பதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
தற்போதைய அன்வார் அரசாங்கத்தில் இடம்பெறாத 12 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து உதிரிக்கட்சிகளின் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தும் யோசனையில் திரு முகைதீன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கூட்டணிக்குத் தலைமை ஏற்பதன் மூலம் தமது அங்கீகாரம் தொடரும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
12 எதிர்க்கட்சிகளும் ஒரு கூட்டணியாக ஒன்றுசேர சம்மதம் தெரிவித்துவிட்டதாக திரு முகைதீன் ஆகஸ்ட் 18ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போது அவர் வெளியிட்ட கட்சிகளின் பட்டியலில் ஆறாண்டுகளுக்கு முன்னர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொண்ட மலேசிய இந்திய மக்கள் கட்சியும் காணப்பட்டது.
இருப்பினும், அது நல்ல யோசனை அல்ல என அரசியல் பார்வையாளர்கள் மறுத்து வருகின்றனர்.
காரணம், அவர் ஒன்றுதிரட்டிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளிடம் கணிசமான வாக்கு வங்கி இல்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு கருத்துத் தெரிவித்த பார்வையாளர்களில் ஒருவரான சன்வே பல்கலைக்கழகப் பேராசிரியரும் அரசியல் அறிவியலாளருமான வோங் சின் ஹுவாட், புதிய உதிரிக்கட்சிகளின் கூட்டணி, எல்லா இனத்தவரையும் உள்ளடக்கியது போல பார்ப்பதற்கு அலங்காரமாகத் தோன்றலாம் என்றபோதிலும் மலேசியாவின் முக்கிய எதிரணி என்னும் நம்பகத்தன்மை மீதான கேள்விகளை அது எழுப்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
“பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி அமைக்கும் ‘பெரிய கூடாரம்’ அதிகம் அறிந்திராத, முக்கியத்துவம் இல்லாத கட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது,” என்றார் அவர்.
ஆயினும், அரசாங்கத்துக்கு எதிரான உதிரிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ‘பெரிக்கத்தான் நேஷனல்’ எதிர்த்தரப்பு கூட்டணியின் தலைவருமான திரு முகைதீன்.
அன்வார் அரசாங்கம் கவனிக்கத் தவறிய விலைவாசி உயர்வு போன்ற பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் புதிய கூட்டணி கவனம் செலுத்தும் என்று அவர் கூறி வருகிறார்.
புதிய கூட்டணியை உருவாக்கும் யோசனை, பெர்சத்து கட்சியின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தின்போது உதயமானது.