தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் மாநாடு: பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மலேசியா கவனம்

2 mins read
80777e5d-3c3a-4ee7-9da9-9677304a315b
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா
multi-img1 of 2

வியந்தியன்: லாவோசில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில், ஆசியானில் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் வட்டார அளவிலான வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்துவதிலும் மலேசியா கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

44வது, 45வது ஆசியான் உச்சநிலை மாநாடுகளும் தொடர்புடைய மாநாடுகளும் அக்டோபர் 8ஆம் தேதி லாவோசில் தொடங்கவிருக்கின்றன.

இவற்றில் கலந்துகொள்வதற்காக மலேசியாவின் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் வியந்தியன் சென்றுள்ளார்.

வட்டாரச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு மலேசியா முன்னுரிமை தரும் என்றார் அவர்.

லாவோஸ் தலைநகர் வியந்தியனில் உள்ள தேசிய மாநாட்டு நிலையத்தில் அக்டோபர் 11ஆம் தேதி வரை உச்சநிலை மாநாடு நடைபெறும்.

ஆசியான் நாடுகளின் தலைவர்கள், வட்டார, அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 2,000க்கு மேற்பட்ட பேராளர்கள் இதில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் அக்டோபர் 8ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கும். அக்டோபர் 9ஆம் தேதி, 44வது, 45வது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய மாநாடுகளுக்கான தொடக்க நிகழ்ச்சி இடம்பெறும்.

அந்த உச்சநிலை மாநாட்டில் மலேசியாவின் அறிக்கையை அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 11ஆம் தேதி, ஆசியான் தலைமைத்துவத்தை லாவோஸ் மலேசியாவிடம் ஒப்படைக்கும்.

இதற்கிடையே, ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்குதல், ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களுடன் 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள மலேசியா தயாராக இருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அண்மைய புவிசார் அரசியல் பதற்றங்கள் வட்டார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறிய அவர், இருப்பினும் தலைமைத்துவப் பகிர்வு, வலுவான நடுநிலை ஆகியவற்றின் மூலம் ஆசியான் இந்தச் சவால்களைக் கடந்து வரும் என்றார்.

ஆசியானுக்கு அப்பாலும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“வட்டாரத்திலும் அனைத்துலக அளவிலும் விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். அதேநேரம் வாய்ப்பு கிடைக்கும்போது சிலர் இரட்டை நிலைப்பாடு, பாசாங்குத்தனம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதையும் நிராகரிக்கிறோம்,” என்றார் திரு அன்வார்.

அக்டோபர் 7ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற கஸானா மெகாடிரெண்ட்ஸ் கருத்தரங்கு 2024ல் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்