மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியிலும் மலேசியாவின் உணவு விநியோகம் சீராக உள்ளது: அமைச்சர்

மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியிலும் மலேசியாவின் உணவு விநியோகம் சீராக உள்ளது: அமைச்சர்

படம்: Getty Images

05 Mar 2026 - 9:24 pm

1 mins read

புத்ராஜெயா: ஈரான், அமெரிக்கா, இஸ்‌ரேல் நாடுகளுக்டையே மோசமடையும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும் மலேசியாவின் உணவு விநியோகம் சீராக உள்ளது என்று அந்நாட்டின் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகம்மது சாபு தெரிவித்தார்.

பெரும்பாலான இறக்குமதிகள் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன என்று அமைச்சர் முகம்மது சாபு கூறினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக மலேசியாவின் உணவுப் பாதுகாப்பு இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும் முக்கிய இறக்குமதிகள் ஆசியான் நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வியாழக்கிழமை (மார்ச் 5) மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற ‘இஹ்யா ரமலான்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் முகம்மது சாபு பேசினார்.

“மத்திய கிழக்கில் எங்களது பங்களிப்பு பெரும்பாலும் ஏற்றுமதி சார்ந்தது. குறிப்பாக, துபாய் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதுவரை எங்களது உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை,” என்று அமைச்சர் முகம்மது சாபு கூறினார்.

மோதல் நீண்ட காலம் நீடித்து எண்ணெய் விலைகள் அதிகரித்தால், அது இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை உயர்த்தக்கூடும் என்றார் அவர்.

மலேசியர்கள் சார்ந்திருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தற்போது பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஉணவுஇறக்குமதிபோர்மத்திய கிழக்கு