கோலாலம்பூர்: மலேசியாவில் சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்களை (gig workers) உள்ளடக்கும் சுயதொழில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு மூன்று மில்லியனைத் தாண்டியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாண்டு செப்டம்பர் மாத நிலவபரப்படி அந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அந்த வகையில், மலேசியாவின் சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்களைச் சார்ந்த பொருளியல் (gig economy) தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது, அத்தகைய வேலைகளின் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை நிலவுவது போன்றவற்றை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்கள் பலர் தொழிலாளர் சட்டங்களுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். அதனால் அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.
சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்களை அனைத்துலக ஊழியரணி அமைப்பு (ILO) சுயதொழில் ஊழியர்களாக வகைப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான ஊழியரணி கருத்தாய்வு அறிக்கையில், மலேசியாவின் சுயத் தொழில் ஊழியர்களின் எண்ணிக்கை 3.09 மில்லியனுக்கு அதிகரித்தது தெரிந்தது. சென்ற ஆண்டு முதல் காலாண்டில் அந்த எண்ணிக்கை 2.93 மில்லியனாகப் பதிவானது.
எனினும், இந்த வளர்ச்சி ஊக்கம் தரும் வகையில் அமைந்தாலும் இத்துறையில் சவால்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர் சட்டங்களின்கீழ் அவர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.
குறைந்தபட்ச ஊதியம், அதிபட்ச வேலை நேரம், சம்பளத்துடன் விடுமுறை போன்ற அம்சங்கள் தொடர்பிலான விதிமுறைகள் அதில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, மலேசியாவில் சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்களைப் பொறுத்தவரை நிலவரம் நம்பிக்கை தரும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இத்துறையின் வளர்ச்சிக்கேற்ப சம்பந்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் சீரான முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதற்கான முயற்சிகளை மலேசிய அரசாங்கம் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர் பொருளியல் மசோதாவை (Gig Workers’ Economy Bill) அறிமுகப்படுத்துவது, பிரதமர் அலுவலகத்தின்கீழ் சொந்த நடைமுறைகளின்கீழ் இயங்கும் மலேசியப் பொருளியல் குழுவை (Malaysian Gig Economy Commission) அமைப்பது போன்ற திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.