கோலாலம்பூர்: எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், மலேசியாவின் பொருளியல் நான்கு முதல் ஐந்து விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் பாதையில் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி பெரும்பாலும் அந்த வரம்பின் உயர் மட்டத்தை நோக்கியே இருக்கும். மேலும், 2026ஆம் ஆண்டில் பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும் என மலேசிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பொருளியல் அடிப்படைகள், சீர்திருத்தத் திட்டங்கள், சிறந்த பொருளியல் நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை, அதிர்ச்சியான சூழல் ஏற்படும்போது அரசாங்கம் பதிலளிக்க உதவியுள்ளன என்று அவர் கூறினார்.
“நாட்டின் மத்திய வங்கியாக, சீர்திருத்தங்கள் வேரூன்ற வழிவகுத்த பெருநிலைப் பொருளியல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் மத்திய வங்கி தனது பங்கை ஆற்றியுள்ளது.
“குறைந்த மற்றும் நிலையான பணவீக்கம், ஒரு வலுவான நிதி அமைப்பு, முறையான நிதிச் சந்தைகள் ஆகியவை பொருளியல் மாற்றத்திற்கு உகந்த நிலைமைகளை உருவாக்க உதவியுள்ளன,” என்று அவர் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 28) கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் சசானா கலந்தாய்வரங்கு 2026 தொடக்க விழாவில் தனது சிறப்புரையில் கூறினார்.
கடந்த ஆண்டு மலேசியாவின் பொருளியல் 5.2 விழுக்காடு விரிவடைந்தது, பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது. மேலும், ரிங்கிட்தான் வட்டாரத்தின் சிறந்த நாணயமாக இருந்தது என்று திரு அப்துல் ரஷீத் மேலும் கூறினார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.2 விழுக்காடாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் இந்த நிதிப் பற்றாக்குறை 3.7 விழுக்காடாகச் சீராகக் குறைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“பொது வளங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கொள்கைக்கான பொது வெளியை மீண்டும் கட்டமைக்க இது உதவியுள்ளது,” என்று அவர் கூறினார்.
மலேசியா தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நுழையும் வேளையில், நிதி அமைப்பும் அதனுடன் சேர்ந்து, விழுமியங்களால் வழிநடத்தப்பட்டு, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் பொறுப்புடன் செயல்படும் ஒன்றாகப் பரிணமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, எதிர்காலப் பொருளியல் வளர்ச்சி நீடித்திருக்க வேண்டும் என்று கூறிய திரு அப்துல் ரஷீத், மலேசியா, உலகின் 17 மிக முக்கிய பல்லுயிர் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் என்றும் நாட்டின் இயற்கை வளம் அதன் பொருளியல் வளத்தைப் போலவே விலைமதிப்பற்றது என்றும் குறிப்பிட்டார்.

