‘ஜிஐஎஸ்பி’யின் போதனை ஏற்கத்தகாதது: மலேசிய இஸ்லாமிய மன்றம்

2 mins read
91a5fd56-ccc0-4e6a-aed7-c3198cddb6f8
ஜிஐஎஸ்பி அமைப்பு. - படம்: பெரித்தா ஹரியான்

புத்ரஜெயா: ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் (GISB - ஜிஐஎஸ்பி) அமைப்பின் தத்துவங்கள், போதனை, சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் ஆகியவை ஏற்கத்தகாதவை என்றும் அவை இஸ்லாமிய போதனையிலிருந்து வழிமாறிப் போனவை என்றும் மலேசியாவின் தேசிய இஸ்லாமிய சமய விவகார அமைப்பின் (எம்கேஐ) முஸாகாரா குழு கூறியுள்ளது.

ஆய்வாளர்கள் ஜிஐஎஸ்பி தொடர்பில் கலந்துபேசிய அம்சங்களையும் அதுகுறித்து சமர்ப்பித்த ஆதாரத்தையும் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக எம்கேஐ முஸாகாரா குழுவின் தலைவரான டாக்டர் நூ காடுட் தெரிவித்தார். அக்குழு, கடந்த செப்டம்பர் மாதம் 24லிருந்து 26ஆம் தேதி வரை ஒன்றுகூடியது.

ஜிஐஎஸ்பியைச் சேர்ந்த நஸிருதீன் முகம்மது அலியின் போதனை ஏற்கத்தகாதவை என்றும் அவை இஸ்லாமிய தத்துவங்களுக்குப் புறம்பானவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது, நஸிருதீன் முகம்மது அலியின் போதனைகளைப் பின்பற்றுவோருக்கும் ஜிஐஎஸ்பியுடன் தொடர்புடைய தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் சுட்டினார்.

ஜிஐஎஸ்பியின் தத்துவங்கள், போதனை, நம்பிக்கைகளைப் பின்பற்றுவதையோ பரப்புவதையோ தவிர்க்குமாறும் அவர் முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசாங்க அமைப்புகள் தவற்றைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை (istitabah) மேற்கொள்ள உதவிக்கரம் நீட்டுமாறும் அதற்குத் தேவையான நிதியுதவி வழங்குமாறும் டாக்டர் நூ கேட்டுக்கொண்டார்.

ஜிஐஎஸ்பியின் போதனை, சித்தாந்தங்கள், நம்பிக்கையின் அம்சங்களைக் கொண்ட பதிவுகளைப் பொதுமக்கள் வைத்திருக்கவோ பெற முயற்சி செய்யவோ கூடாது என்றும் அவர் எடுத்துரைத்தார். அதன்படி, ஜிஐஎஸ்பியின் சித்தாந்தங்களையும் நம்பிக்கைகளையும் முன்வைக்கும் புத்தகங்கள், சஞ்சிகைகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது, பதிவிறக்கம் செய்வது, விநியோகிப்பது, விற்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்பில் மலேசிய தேசிய இஸ்லாமிய சமய விவகார அமைப்பு, சட்ட ரீதியான அதன் கருத்தை எம்கேஐ தலைவரான பேராக் மன்னர் சுல்தான் முய்ஸுதீனிடமும் கடந்த அக்டோபர் மாதம் 23, 24ஆம் தேதிகளில் நடைபெற்ற 267வது மன்னர்கள் மாநாட்டிலும் சமர்ப்பித்ததாக டாக்டர் நூ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்