கோலாலம்பூர்: சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், தம் மீது சுமத்தப்பட்டு உள்ள US$500 மில்லியன் (S$669 மில்லியன்) ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்த வாரம் தற்காப்பு வாதத்தைத் தொடங்க உள்ளார்.
1எம்டிபி அரசாங்க நிதியில் மோசடி செய்த குற்றத்துக்காக அவர் ஆறாண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அந்தக் குற்றம் தவிர, 2.27 பில்லியன் ரிங்கிட் (S$683 மில்லியன்) ஊழல் தொடர்புடைய வகையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்டுத்திய நான்கு குற்றச்சாட்டுகளையும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய 21 குற்றச்சாட்டுகளையும் 71 வயது நஜிப் எதிர்நோக்குகிறார்.
அந்த வழக்கு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 2) தொடங்குகிறது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்துக்கும் 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
தற்காப்பு வாதத்தை இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக முன்வைக்கப் போவதாக நஜிப்பின் வழக்கறிஞர் குழுவை வழிநடத்தும் முஹம்மது ஷஃபீ அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தம்மை வீட்டுக் காவலில் வைக்க அனுமதி கோரி வழங்கப்பட்ட நஜிப் தாக்கல் செய்த மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் அது குறித்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வழக்கை வரும் 5ஆம் தேதி (வியாழக்கிழமை) விசாரிக்க உள்ளது. அது தொடர்பாக நஜிப் எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க முன்னாள் மாமன்னர் அனுமதி வழங்கி இருப்பதால், அந்த அரசாணையை ஏற்று செயல்படுத்த அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை நஜிப் கேட்டிருந்தார்.
ஆனால், செவி வழித் தகவல் என்பதால் நஜிப்பின் கூற்றை ஏற்க இயலாது என்று ஜூலை மாதம் நீதிமன்றம் கூறியது. இந்த வாரம் அது குறித்த தமது வாதத்தை முன்வைத்து வாதாட நஜிப் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கலாம் என அடுத்த ஆண்டு சட்டம் இயற்ற உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் நஜிப் பயனடையக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.