5 மாதங்களுக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பிய ஜாலான் மஸ்ஜித் இந்தியா

2 mins read
2d058281-8473-469f-a65e-d593b203aeeb
ஜாலான் மஸ்ஜித் இந்தியா கடைவீதியில் அசம்பாவிதம் நிகழ்ந்த இடம் பழுதுபார்க்கப்பட்டு அதன் மேல் கறுப்புநிற தரைக்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: ஆழ்குழி சம்பவம் நிகழ்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு மலேசியாவின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா கடைவீதி வழக்கநிலைக்குத் திரும்பி உள்ளது.

தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியா வர்த்தக வட்டாரம் நகரின் தொன்மையைப் பறைசாற்றுகிறது. புடவைகள், மலாய் உடைகள், பாரம்பரிய இந்திய, மலாய் உணவு வகைகள், தங்க நகைகள் போன்றவை அங்கு பிரபலம்.

சுங்கை கிள்ளான், சுங்கை கோம்பாக் என்னும் நகரின் பெருமைக்குரிய ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள அந்த வட்டாரத்தில் நோன்பு காலத்தின்போது அதிகமான முஸ்லிம் மக்களைக் காணமுடியும். சிங்கப்பூரின் கேலாங் சிராய் போன்ற விழாக்கால கடை வர்த்தகம் அங்கு காணப்படும்.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த ஒரு சம்பவம் அந்த இடத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டது.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இருந்து மலேசியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த விஜயலட்சுமி, 48, என்பவர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வீதியில் ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டு இருத்போது திடீரென ஏற்பட்ட ஆழ்குழிக்குள் விழுந்தார்.

எட்டு அடி ஆழ குழிக்குள் தவறி விழுந்த அந்தப் பெண்ணை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்பது நாள்கள் இரவு பகலாக கடுமையாக முயன்றும் இறுதிவரை அந்தப் பெண் உயிருடனோ சடலமாகவோ மீட்கப்படவில்லை.

பலத்த மழை பெய்ததால் பாதாள கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் அந்தப் பெண் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.

அந்த அசம்பாவிதத்திற்குப் பிறகு ஆழ்குழி மூடப்பட்டு புதிய கறுப்புநிற தரைக்கற்கள் அதன் மேல் பதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதன் வழியாக எவ்வித சிரமமும் இன்றி நடந்துசெல்வதைத் தற்போது காணமுடிகிறது.

நோன்புக் காலம் நெருங்கி வருகிறது. மார்ச் 31ஆம் தேதி நோன்புப் பெருநாளாகக் கொண்டாடப்படலாம். முஸ்லிம் பெருமக்கள் மார்ச் மாதத்தில் நோன்பைக் கடைப்பிடிப்பார்கள் என்பதால் விழாக்கால வியாபாரத்திற்கு அந்த வட்டாரம் தற்போது தயாராகிவிட்டது.

குறிப்புச் சொற்கள்