பெட்டாலிங் ஜெயா: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், தசை-எலும்பு (musculoskeletal) வலிக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்றிருப்பதாக அந்நாட்டின் மன்னர் மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மாமன்னர் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) மலேசியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னர் இப்ராகிம் மேற்கொண்ட தீவிர ராணுவப் பயிற்சிகள், அவரின் துடிப்பான வாழ்க்கைமுறை ஆகியவை உடலின் தசைகளையும் எலும்புகளையும் பாதிக்கும் தசை-எலும்பு வலி ஏற்பட்டதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வயதில் அவர் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்ட போலோ விளையாட்டு, பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாமன்னர் இப்ராகிமும் அவரது துணைவியாரும் மலேசிய அரசியாருமான ராஜா ஸாரித் சோஃபியாவும் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டதற்காக மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.