கோலாலம்பூர்: மலேசியாவில் ஓட்டுநரில்லாத ரயில் சேவை இவ்வாண்டின் நடுப்பகுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முக்கிய முனையத்தையும் அனைத்துலக விமானங்கள் வந்து செல்லும் சேட்டிலைட் வளாகத்தையும் அந்த ரயில் இணைக்கும்.
ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொன்றுக்கு பயணிகளை மூன்றே நிமிடத்தில் அந்த ரயில் கொண்டு செல்லும்.
ஈராண்டு தாமதத்திற்குப் பிறகு இவ்வாண்டு அந்த ரயில் சேவை வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
அந்த ‘ஏரோடிரெய்ன்’ சேவைக்காக மூன்று பெரிய ரயில்கள் வாங்கப்பட்டு உள்ளன. அவை ஒவ்வொன்றும் 456 மில்லியன் ரிங்கிட் (S$140 மில்லியன்) விலையுடையது.
ஒவ்வொரு ரயிலிலும் மூன்று பயணப் பெட்டிகள் இருக்கும். இரண்டு ரயில்கள் மட்டுமே எதிரெதிர் திசையில் சேவை புரியும். மூன்றாவது ரயில் அவசரத் தேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை இயக்கும் மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் குழுமம் (MAHB) இந்த விவரங்களைத் தெரிவித்து உள்ளது.