பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் புதிய தலைமை நீதிபதியாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வான் அகமது ஃபாரிட் சாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவி உட்பட மூன்று முன்னணி நீதித் துறைப் பொறுப்புகளுக்கு அந்நாட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் நியமனங்களை அறிவித்துள்ளார்.
மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதித்துறை நியமனங்கள் இடம்பெற்றன. அந்நாட்டுப் பிரதமர், மாநில மன்னர்கள் ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப நியமனங்கள் இடம்பெற்றதாக மலேசிய அரசு நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திரு வான் அகமது ஃபாரிட்டைத் தவிர நீதிபதிகள் அபு பக்கார் ஜாய்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராகவும் அஸிஸா நவாவி, சாபா, சரவாக் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூவரும் அதிகாரபூர்வமாகப் பதவியேற்கும் சடங்கு இம்மாதம் 28ஆம் தேதி மாமன்னரின் முன்னிலையில் தேசிய அரண்மனை மாளிகையில் நடைபெறும்.
தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்க திரு வான் அகமது ஃபாரிட்தான் முன்னிலையில் இருந்தார் என்று முன்னதாகக் கூறப்பட்டது. அவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
62 வயதாகும் அவர், 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் 2009 ஏப்ரல் 9ஆம் தேதி வரை துணை உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
2009ஆம் ஆண்டு கோலா திரங்கானு மாநிலத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தார்.
முன்னாள் அம்னோ கட்சி உறுப்பினரான திரு வான் அகமது ஃபாரிட், அரசியலிலிருந்து விலகப்போவதாக 2013ஆம் ஆண்டு அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் தலைமை நீதிபதி பொறுப்பு காலியாக இருந்ததன் தொடர்பில் சர்ச்சை தொடர்ந்தது. அப்பொறுப்புக்கான நியமனத்தில் அரசாங்கத் தலையீடு இருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.
இப்போது அந்த அச்சம் தணியும் என்று நம்பப்படுகிறது.

