மலேசியப் பொருளியல், ஆட்சிமுறையை வலுப்படுத்த புதிய பெருந்திட்டம்

2 mins read
a2df1a31-e1d3-4be5-bc0f-385c920e5d7b
நீடித்த நிலைத்தன்மைமிக்க பொது-தனியார் துறை பங்காளித்துவச் சூழலுக்குத் தேவையான அடித்தளத்தை ‘பிக்காஸ் 2030’ பெருந்திட்டம் வழங்குவதாக திரு அன்வார் கூறினார். - படம்: மலேசிய ஊடகம்

சைபர்ஜெயா: மலேசியாவின் பொருளியல் மேம்பாட்டையும் ஆட்சி முறையையும் வலுப்படுத்துவதே புதிய பொது-தனியார் துறை பங்காளித்துவப் பெருந்திட்டம் 2030ன் இலக்கு என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இப்பெருந்திட்டம் சுருக்கமாக ‘பிக்காஸ் 2030’ என்று அழைக்கப்படுகிறது.

பொது-தனியார் துறை பங்காளித்துவத்துக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் திட்டங்கள் துரிதமான முறையில் நிர்வகிக்கப்படுவதை ஊக்குவிக்கவும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகப் பிரதமர் அன்வார் கூறினார்.

இதன்மூலம் மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி விரைவுபடுத்தப்படும் என்றார் அவர்.

நீடித்த நிலைத்தன்மைமிக்க பொது-தனியார் துறை பங்காளித்துவச் சூழலுக்குத் தேவையான அடித்தளத்தை இந்த உத்திபூர்வப் பெருந்திட்டம் வழங்குவதாக திரு அன்வார் கூறினார்.

அரசாங்கத்தின் நிதிச் சுமையைக் குறைக்க பொது-தனியார் துறை பங்காளித்துவம் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.

“பொது-தனியார் துறை பங்காளித்துவம் மலேசியாவில் புதிதல்ல. மலேசியாவின் வளர்ச்சிக்கு இந்த அணுகுமுறை பேரளவில் பங்களித்திருப்பதை 1980களிலிருந்து கண்டு வருகிறோம்.

“தனியார் துறையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மற்ற தேவைகளுக்காக அரசாங்க வளங்களை ஒதுக்கும் அதே நேரத்தில் முக்கிய உள்கட்டமைப்புகளை அமைக்கலாம்,” என்று பெருந்திட்டத்தின் அறிமுக விழாவில் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

இந்த அறிமுக விழா செப்டம்பர் 9ஆம் தேதியன்று பல்லூடகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்தப் பெருந்திட்டம் பெரிய இலக்குகளைக் கொண்டுள்ளதாக திரு அன்வார் குறிப்பிட்டார்.

இத்திட்டம் மூலம் தனியார் முதலீடு 78 பில்லியன் ரிங்கிட் அதிகரிக்கும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 82 பில்லியன் ரிங்கிட் தொகையைப் பெருந்திட்டம் பங்களிக்கும் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் 900,000 வேலைகளை அது உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் விவரித்தார்.

இந்தப் பெருந்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், மலேசியாவின் பொருளியலை வலுப்படுத்துவது மட்டுமல்லாது வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிசெய்ய தனக்கு இருக்கும் முனைப்பை மலேசிய அரசாங்கம் காட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்