கோலாலம்பூர்: சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலை, தோக்கியோவின் கின்சா போன்று கோலாலம்பூரின் புக்கிட் பிந்தாங் வட்டாரத்தை உருமாற்றுவதற்கான திட்டத்தை மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் வெளியிட்டிருக்கிறார்.
பெவிலியன் கோலாலம்பூர் கடைத்தொகுதியில் ‘ஐ லைட் யூ’ எனும் அத்திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் திரு மிங் கலந்துகொண்டார்.
நகரின் முன்னணி வணிக வட்டாரமாகத் திகழும் புக்கிட் பிந்தாங்கை இன்னும் துடிப்புமிக்கதாகவும் வண்ணமயமானதாகவும் மாற்ற அத்திட்டம் இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வீடமைப்பு, உள்துறை அமைச்சும் கோலாலம்பூர் மாநகராட்சியும் (டிபிகேஎல்) இணைந்து அத்திட்டத்தை மேற்கொள்ளவிருக்கின்றன.
“தோக்கியோவின் கின்சா ஸ்திரீட் அல்லது சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலைக்கு நிகராக புக்கிட் பிந்தாங்கை உருமாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம்,” என்று திரு மிங் கூறியதாக ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.
‘மலேசியாவிற்கு வாருங்கள் 2026’ (விசிட் மலேசியா 2026) எனும் இயக்கத்தின் ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாக புக்கிட் பிந்தாங் உருமாற்றத் திட்டம் இடம்பெறுகிறது.
மலேசியப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கலைநயமிக்க தெருவிளக்குகள், புதிய ‘விசிட் மலேசியா 2026’ சிலை உள்ளிட்ட நான்கு முதன்மையான அங்கங்களை அத்திட்டம் உள்ளடக்கும்.
‘ஐ லைட் யூ’ திட்டத்தை வரும் ஜனவரி 3ஆம் தேதி பிரதமர் அன்வார் இப்ராகிம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைப்பார் என்று அமைச்சர் மிங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது இடம்பெறும் அணிவகுப்பிற்கு ஏதுவாக, புக்கிட் பிந்தாங்கின் பல்வேறு சாலைகள் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.
‘ஐ லைட் யூ’ திட்டமானது சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நகரின் இரவுநேரப் பொருளியலை ஊக்குவிக்கவும் இலக்கு கொண்டுள்ளதாகக் கோலாலம்பூர் மேயர் மைமூனா ஷரிஃப் குறிப்பிட்டார்.
தோக்கியோ, துபாய் போன்ற சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் அனைத்துலக நகரங்களுக்கு நிகராக கோலாலம்பூரை உருமாற்றுவதே நோக்கம் என்றார் அவர்.
‘விசிட் மலேசியா 2026’ காலகட்டத்தில் 45 மில்லியன் சுற்றுப்பயணிகளை ஈர்க்க மலேசிய சுற்றுப்பயணத்துறை இலக்கு கொண்டுள்ளது.

