கோலாலம்பூர்: மலேசியாவில் பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினையாக இருப்பதையும் தாண்டி, இப்போது பொதுச் சுகாதாரத்துக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் தொடர்க் கட்டமைப்பை மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச் சிறிய பிளாஸ்டிக் துளிகள் மாசுபடுத்தியிப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துள்ளன. மலேசியாவின் கழிவு நிர்வாகக் கட்டமைப்பு உடனடியாக முழுமையாக மாற்றப்படவேண்டும் என்று பாதுகாப்பான சமூகத்துக்கான கூட்டணி குரல் கொடுத்துள்ளது.
மலேசியர்கள் ஆண்டுதோறும் உணவுவழி 2,016 மைக்ரோபிளாஸ்டிக் துளிகள்வரை உட்கொள்ளக்கூடும் என்பதைச் சுட்டிய கூட்டணியின் தலைவர் லீ லாம் தை, பல காலமாக இருந்துவரும் பிரச்சினையை இது நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார். மலேசியாவின் உணவுப் பாதுகாப்பு முறை கட்டங்கட்டமாகப் பாதிக்கப்படுவதாக அவர் எச்சரித்தார்.
இரட்டிப்புப் பின்னடைவு
அதோடு, உள்ளூரில் மீனவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
அதிலும் பேராக், பினாங்கு மாநிலங்களில் மீனவர்கள் பிடிக்கும் மீன்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட கடல்வாழ் உயிரினங்களைத் தாங்கள் அதிகம் சந்திக்க நேரிடுவதாகவும் மீனவர்கள் கூறியதாக திரு லீ சொன்னார்.
அந்த வகையில், பொருளியல், சுற்றுச்சூழல் இரண்டிலும் பிரச்சினைகள் நிலவுவதால் இரட்டிப்பு பாதிப்பு ஏற்படுவதாக அவர் கூறினார்.
இச்செய்தியை வெளியிட்ட நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், முன்னதாக மலேசியாவின் மீன்பிடிப்புத் துறையில் அதிகமான கவலைதரும் நிகழ்வுகள் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தது.

