கோலாலம்பூர்: மலேசியாவின் மக்கள்தொகை இப்போது 34.1 மில்லியனை எட்டியுள்ளது. மலேசியாவின் புள்ளிவிவரத் துறையின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய மக்கள்தொகை மதிப்பீடுகள் 2024 அறிக்கை ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 33.4 மில்லியனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மக்கள்தொகையின் வளர்ச்சி 0.7 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.
மக்கள்தொகை ஒட்டுமொத்தமாக அதிகரித்திருந்தாலும், வெளிநாட்டினருடன் ஒப்பிடுகையில் குடிமக்கள் விகிதம் குறைந்துள்ளது.
ஏப்ரல் 1, 2022 அன்று மலேசியாவின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டது, ஜனவரி 2023ல் வேலைவாய்ப்பு மறுசீரமைப்புத் திட்டம் 2.0 செயல்படுத்தப்பட்டது ஆகியவை, குடிமக்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மலேசியாவின் புள்ளிவிவரத் துறை கூறும் காரணங்களாகும்.
“2024ஆம் ஆண்டில் குடிமக்கள் விகிதம், 2023ல் இருந்த 91.1 விழுக்காட்டிலிருந்து, 90.0 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேவேளையில், குடிமக்கள் அல்லாதவர்களின் விகிதம் அதே காலகட்டத்தில் 8.9 விழுக்காட்டிலிருந்து 10.0 விழுக்காடாக அதிகரித்துள்ளது,” என்று அறிக்கை கூறுகிறது.
மக்கள்தொகையில் 30.7 மில்லியன் குடிமக்களாக உள்ளனர். அதில் பூமிபுத்ராக்கள் குடிமக்களின் மக்கள்தொகையில் 70.4 விழுக்காட்டில் ஆதிக்கம் செலுத்துவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் 70.1 விழுக்காட்டிலிருந்து அதிகரித்துள்ளது.
“இதற்கிடையே, சீனர்கள் மற்றும் இந்தியர்களின் விகிதம் 2023ல் முறையே 22.6 விழுக்காடு, 6.6 விழுக்காட்டில் இருந்து, 2024ல் 22.4 விழுக்காடு மற்றும் 6.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதைத் தவிர மற்றவர்களின் விகிதம் 0.7 விழுக்காடாக இருந்தது,” என்று அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டின் மக்கள்தொகையில் 21.6 விழுக்காட்டைக் கொண்ட சிலாங்கூர், அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக இருந்தாலும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 927 பேர் என்ற அளவில் பார்க்கும்போது, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் அது ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
மாறாக, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு முறையே 8,518 மற்றும் 2,440 பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.