கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கியின் பதவிக்காலம் வரும் மே 12ஆம் தேதி முடிவடையும்போது, பிரதமர் அன்வார் இப்ராகிம் அவரைப் பதவியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளதாக உயர்நிலைத் தகவல்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.
அந்த ஆணையத்திற்கும் அதன் தலைவருக்கும் எதிராக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
திரு அஸாமிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திரு அஸாமிற்கு நான்காவது முறையாகப் பதவிக்காலத்தை நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
“பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மைய வாரங்களில் அஸாமின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சரவையில் வலியுறுத்திவருகிறார்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பெயர் வெளியிடாத அதிகாரபூர்வத் தகவல் ஒன்று கூறியுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியான அறிக்கைகள், குறிப்பாக அமெரிக்காவில் தளம் கொண்டுள்ள புளூம்பெர்க் அறிக்கை ஒன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பல்லாண்டுகளாக அதன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நிறுவனங்களிடமிருந்து பணம் எடுத்ததோடு, அவற்றைத் தனக்குச் சாதகமாகச் சதிசெய்ய வைத்ததாகக் கூறின.
அதன் காரணமாக எழுந்துள்ள ஆர்ப்பாட்டங்களில், திரு அஸாம் விசாரணை முடிவுறும்வரை தற்காலிகமாகப் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் சொந்த பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்தும்கூட அந்தக் கோரிக்கைகள் வந்துள்ளன.
கோலாலம்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற ‘அஸாம் பாக்கியைக் கைதுசெய்’ எனும் பேரணியில், முன்னாள் பொருளியல் அமைச்சரும் திரு அன்வாரின் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான திரு ரஃபிஸி ரம்லியும் அக்கட்சியைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

