கோலாலம்பூர்: குறைந்தபட்சச் சம்பளத்திற்குமேல் சம்பாதிக்கும் ஊழியர்கள் அவ்வப்போது சம்பள உயர்வுகளைப் பெறுவதை உறுதிசெய்ய மலேசியாவின் சம்பளக் கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தேசியச் சம்பள ஆலோசனை மன்றம் கூறியுள்ளது.
அரசாங்கம் தற்போது குறைந்தபட்சச் சம்பளத்தை மாதம் 1,700 ரிங்கிட்டாக நிர்ணயித்துள்ளது என்று தேசியச் சம்பள ஆலோசனைக் குழு உறுப்பினர் கௌரவப் பேராசிரியர் அன்வார் அலி தெரிவித்தார்.
இருப்பினும், 1,800 ரிங்கிட் அல்லது 1,900 ரிங்கிட் சம்பளம் பெறும் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைப்பதை உறுதிசெய்வதற்குத் தெளிவான நடைமுறை எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
“இந்தச் சூழ்நிலை காரணமாக, பல முதலாளிகள் குறைந்தபட்சச் சம்பளத்தை அமல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அந்த வரம்பிற்குமேல் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான சம்பளக் கட்டமைப்பை மறுஆய்வு செய்வதில்லை.
“வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையிலும், அவர்களின் வருமானம் எந்த மாற்றமும் இன்றி தேக்கமடைந்துள்ளதால், அப்பிரிவினர் இறுதியில் பொருளாதார நெருக்குதலுக்கு ஆளாகிறார்கள்,” என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற்ற ‘இரண்டாவது மலேசியா விஸ்டம் மாநாடு 2026’ல் அவர் தெரிவித்தார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலவரத்தோடு ஒப்பிடும்போது, புதிய பட்டதாரிகளுக்கான தொடக்கச் சம்பளம் சரிவடையும் போக்கைக் காட்டிவருவதாகத் திரு அன்வார் கூறினார்.
“கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டக்கல்வியை முடித்த புதிய பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கைத் தொழிலை மாதம் ஏறக்குறைய 3,500 ரிங்கிட் சம்பளத்தில் தொடங்க முடிந்தது.
“இன்று, பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, வேலைச் சந்தையில் உள்ள நெருக்குதல்கள் காரணமாக, தொடக்கச் சம்பளம் குறைந்தபட்சச் சம்பள அளவை நெருங்கி வருகிறது. உண்மையில், சில பட்டதாரிகளுக்கு மாதம் 2,000 ரிங்கிட்முதல் 2,500 ரிங்கிட்வரை மட்டுமே கிடைக்கிறது,” என்று அவர் கூறினார்.
நீடித்து நிலைத்திருக்கக்கூடிய ஓர் ஊழியர்ச் சந்தையை உறுதிசெய்ய, மத்திய, மாநில அரசாங்கங்கள் தீர்க்க வேண்டிய முக்கிய சவால் இதுவென்று அவர் கூறினார்.


