கோலாலம்பூர்: ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான உடன்பாடு ஆண்டிறுதிக்குத் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.
முன்னதாக, அந்த உடன்பாடு அடுத்த மாதம் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், பல்வேறு முக்கிய அம்சங்கள் மீதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதால் போதிய அவகாசத்திற்கான தேவை எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் இருநாட்டுத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான இறுதி ஆலோசனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை ஜோகூருக்கு நீட்டிக்கத் தேவைப்படும் நிதிக்கான பங்களிப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பது, இன்னும் பேசித் தீர்க்கப்படாத அம்சங்களில் ஒன்று.
அதேபோல, திறன்மிகு ஊழியர் அணிக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனையும் இன்னும் முற்றுப்பெறவில்லை என விவரமறிந்த வட்டாரங்கள் கூறின.
சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூரும் மலேசியாவும் இவ்வாண்டு ஜனவரியில் கையெழுத்திட்டன.
இறுதி உடன்பாட்டில் இரு நாடுகளும் செப்டம்பர் மாதம் கையெழுத்திடும் என்று மலேசியாவின் பொருளியல் துறை அமைச்சர் ரஃபிஸி ராம்லி கடந்த ஜூலை மாதம் கூறி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஜோகூர் மாநிலத்தின் முதலீடு, வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரக் குழுவின் தலைவரான லீ டிங் ஹான் உடன்பாடு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடு, ஆண்டிறுதியில் நடைபெற இருக்கும் தலைவர்களின் வருடாந்திர ஓய்வுத்தளச் சந்திப்பில் கையெழுத்திட தற்போது தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
“மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான புரிதலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
“பலன் தரக்கூடிய பல நல்ல விளைவுகளை ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
“எனவே, அதற்கான உடன்பாட்டை இரு நாடுகளும் ஏற்படுத்தும் முன்னர் கொள்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பில் மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது,” என்று அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.