கோலாலம்பூர்: மலேசியாவின் சுற்றுப்பயணத்துறை 2025ஆம் ஆண்டில் 323 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டியது. இது மலேசியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.9 விழுக்காட்டுப் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை மலேசியப் புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது.
மலேசியாவின் ‘சுற்றுப்பயணச் செயற்கைக்கோள் கணக்கு 2025’அறிக்கை, நாட்டின் சுற்றுப்பயணத்துறை கடந்த ஆண்டில் 8.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
இது 2024ஆம் ஆண்டின் 7.8 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அதிகம். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவினங்களின் வலுவான தேவையே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
உள்நாட்டுச் சுற்றுப்பயணச் செலவினம் 2025ஆம் ஆண்டில் 15.2 விழுக்காடு அதிகரித்து 236.9 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது. இதற்கு முந்தைய ஆண்டில் இதன் மதிப்பு 205.6 ரிங்கிட் பில்லியனாக இருந்தது.
நாட்டின் மொத்த உள்நாட்டுச் சுற்றுப்புறச் செலவினத்தில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் பங்களிப்பு 52.7 விழுக்காடாகவும் உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளின் பங்களிப்பு மீதமுள்ள 47.3 விழுக்காடாகவும் அமைந்தது.
இதில் வெளிநாட்டுச் சுற்றுப்யணிகளின் செலவினம் 16.5 விழுக்காடு அதிகரித்து 124.8 ரிங்கிட் பில்லியனாகப் பதிவானது. 2024ஆம் ஆண்டில் இது 41.3 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது.
வெளிநாட்டுச் சுற்றுலாச் செலவினத்தில், மலேசியாவில் தங்கிச் செல்லும் சுற்றுப்பயணிகள் 95.6 விழுக்காட்டுப் பங்களிப்பையும் குறுகிய காலப் பயணம் மேற்கொள்பவர்கள் 4.4 விழுக்காட்டுப் பங்களிப்பையும் வழங்கினர்.
அதேவேளையில், உள்நாட்டுச் சுற்றுப்பயணிகளின் செலவினமும் 13.8 விழுக்காடு உயர்ந்து 112.1 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது. 2024ஆம் ஆண்டில் இதன் வளர்ச்சி 25.1 விழுக்காடாக இருந்தது.
இதனிடையே, 2025ஆம் ஆண்டில் மலேசியாவில் சுற்றுப்பயணம் சார்ந்த தொழில்களில் 3.7 மில்லியன் மக்கள் பணியாற்றியுள்ளனர். இது மலேசியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 22.1 விழுக்காடாகும்.
சுற்றுப்பயணம் சார்ந்த தொழில்களுக்கான வேலைவாய்ப்பு கடந்த ஆண்டில் 3.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
2024ஆம் ஆண்டில் இவ்வளர்ச்சி 4.6 விழுக்காடாக இருந்தது. சுற்றுப்பயணம் சார்ந்த வேலைவாய்ப்பில் சில்லறை விற்பனைத் துறை 37.9 விழுக்காட்டுடன் முதலிடத்திலும் உணவு மற்றும் பானங்கள் வழங்கும் சேவைகள் 36.7 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்திலும் குறிப்பிட்ட நாட்டுக்கே உரிய சிறப்புச் சுற்றுப்பயணச் சேவைகள் 10.5 விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இந்த மூன்று துணைத் துறைகளும் இணைந்து சுற்றுப்பயணம் சார்ந்த தொழில்களின் மொத்த வேலைவாய்ப்பில் 85.1 விழுக்காட்டைப் பங்களிப்பாகக் கொண்டுள்ளன.
