கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏப்ரல் 9ஆம் தேதி உலக நாடுகளுக்கு எதிராக அறிவித்த பரந்த அளவிலான வரிகளை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு மலேசிய பொருளியலுக்கு மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசிய நாட்டுப் பொருளியல்களுக்கும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் அந்நாட்டு முதலீடு, வர்த்தக, தொழில்நுட்ப அமைச்சர் துங்கு ஸஃப்ருல் அசிஸ் அமெரிக்கா விரைகிறார்.
ஆசியான் அமைப்புக்கு மலேசியா இவ்வாண்டு தலைமை ஏற்றிருப்பதால் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குமான பாதிப்பைக் குறைக்கும் வகையில் அவர் எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அமெரிக்கா சென்று அமெரிக்க வர்த்தகப் பிரிதிநிதி ஜேமிசன் கிரியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எனினும், வர்த்தக அமைச்சர் திரு ஹவர்ட் லுட்னிக் உடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து உறுதியான தகவல் இல்லை என்று கூறப்படுகிறது.
மலேசியாவுக்கு எதிரான வரி விதிப்பு 24 விழுக்காடாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றபோதும், அமெரிக்க நிலைப்பாட்டை விரைவிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைப்பதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன
“இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்க நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வது, வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்பை எவ்வாறு குறைக்கலாம், பேச்சுவார்த்தையை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்பது பற்றியது.
“இந்தக் குறுகியகால பயணத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வரிகளை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியாது,” என்று பேங்காக் சென்றபின் செய்தியாளர்களுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி அளித்த நேர்காணலில் திரு ஸஃப்ருல் தெரிவித்தார்.
இதுதான் ஜப்பானிய, இந்தோனீசிய அதிகாரிகளின் அனுபவமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தையை 60 நாள்களுக்குள் முடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்தோனீசியா உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா எப்ரல் 2ஆம் தேதி தனது அனைத்து வர்த்தக பங்காளி நாடுகளுக்கும் எதிராக வரி விதித்தது கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியில் மூழ்கின. பின்னர் அந்த வரி விதிப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி நடப்புக்கு வரவுள்ள நிலையில் திரு டிரம்ப் அதை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்தார்.