புத்ரா ஜெயா: மலேசியாவின் வேலையின்மை விகிதம் இவ்வாண்டு மார்ச் மாதம் 3.1 விழுக்காடாக இருந்தது.
பின்னர் ஏப்ரல் மாதம் அது 3 விழுக்காட்டுக்கு குறைந்தது. இது கடந்த பத்து ஆண்டுகளில் காணாத ஆகக் குறைந்த விகிதம் என்று தொழிலாளர் அணியின் புள்ளிவிவரக் கணக்கு தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிவரத் துறை கூறுகிறது.
இதன்படி, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை மார்ச் மாதம் 529,600 இருந்த நிலை ஏப்ரல் மாதம் 525,900க்கு குறைந்ததாக தலைமை புள்ளிவிவர கணக்காளர் முகமது உஸிர் மகிதின் தெரிவித்தார்.
“மலேசியாவின் நம்பிக்கை தரும் பொருளியல் நிலவரம் தொழிலாளர் அணியின் ஒரு மாத சீரான முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. இதனால், வேலையில் சேர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் ஊழியர் அணியின் பங்களிப்பும் ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில், வேலையின்மை விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது,” என்று திரு முகமது உஸிர் மகிதின் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய திரு முகமது உஸிர், தொழிலாளர் அணியின் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 0.2 விழுக்காடு அதிகரித்து மார்ச்சில் 17.31 மில்லியனாக இருந்தது ஏப்ரல் மாதம் 17.34 மில்லியன் என்ற எண்ணிக்கையை தொட்டதாகத் தெரிவித்தார்.
“இதனால், தொழிலாளர் அணியின் பங்களிப்பு 0.1 விழுக்காடு அதிகரித்து 70.8 % என்ற நிலையை எட்டியது. இது மார்ச் மாதம் 70.7 விழுக்காடாக இருந்தது,” என்று அவர் விளக்கினார்.
பொருளியல் வளர்ச்சிக்கு சேவைத் துறைதான், குறிப்பாக அதன் மொத்தக் கொள்முதல், சில்லறை வர்த்தகம், தங்கும் வசதி, உணவு, பானம், போக்குவரத்து, சேமிப்பு பிரிவுகள் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதாக திரு முகமது உஸிர் கூறினார்.
இவற்றுடன், உற்பத்தி, கட்டுமானம், வேளாண் போன்ற பிரிவுகளும் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டன என்று அவர் சொன்னார்.

