தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவின் வரலாறு காணாத $144 பில்லியன் வரவுசெலவுத் திட்டம்

2 mins read
92489ae1-98ad-4133-bebb-320e890d0717
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வரலாறு காணாத வரவுசெலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான (2026) அந்த வரவுசெலவுத் திட்டத்தின் மதிப்பு 470 பில்லியன் ரிங்கிட் ($144.5 பில்லியன்).

இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 412.1 பில்லியன் ரிங்கிட்டைவிட அது அதிகம். தொடக்கத்தில் நடப்பு நிதியாண்டுக்கான செலவு 421 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மதிப்பு 419.2 பில்லியன் ரிங்கிட் என்று சொல்லப்பட்டிருந்தது. அதில் 338.2 பில்லியன் ரிங்கிட் நடைமுறைச் செலவுக்குச் செல்லும் என்றும் எஞ்சிய 81 பில்லியன் ரிங்கிட் அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திரு அன்வார் நாடாளுமன்றத்தில் பேசியபோது திருத்தப்பட்ட மதிப்புடன் கூடிய வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.

அரசாங்கத்திற்கு அன்றாடம் ஆகும் செலவு நடைமுறைச் செலவின்கீழ் வரும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் முதலியவை அவற்றுள் சில. உள்கட்டமைப்பு போன்ற நீண்டகாலச் சொத்துகளை உருவாக்குவதற்குத் தேவைப்படும் நிதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் செலவுக்குக் கீழ் வரும்.

நிச்சயமற்ற வெளிப்புறச் சூழலுக்கு இடையே நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர மலேசியா உறுதிபூண்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

அமெரிக்கத் தீர்வைகளால் மலேசியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இருந்தபோதும் அதன் பொருளியல் வளர்ச்சி அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. நாடு அதன் பற்றாக்குறையைக் குறைக்க வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த ஆண்டு (2025) ஜூலையில் வெளியிடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டத்தின் பொருளியல் வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மலேசியாவின் பொருளியல் அடுத்த ஆண்டில் நான்கு விழுக்காட்டுக்கும் நாலரை விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு அன்வார் 2022ல் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து அரசாங்கத்தின் நிதியிருப்பைப் பெருக்கப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறைந்தபட்ச ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தியது, விற்பனை வரியை விரிவுபடுத்தியது, குறிப்பிட்ட சில பகுதியினருக்கு பெட்ரோல், டீசல் தள்ளுபடிகளை அகற்றியது முதலியவை அவற்றுள் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவரவுசெலவுத் திட்டம்அன்வார் இப்ராகிம்