ஜோகூர்பாரு: ஜோகூரில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான இரண்டு சோதனைச் சாவடிகளிலும் சனிக்கிழமை (ஜனவரி 10) நண்பகலுக்குப் பிறகு 12.30 மணியளவில் ஏற்பட்ட மின்கோளாறால் சிங்கப்பூரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டனர்.
கடப்பிதழைப் பயன்படுத்திச் செல்ல அங்கு வைக்கப்பட்டிருந்த மின்கதவுகளில் ஏற்பட்ட பிரச்சினையால், பலர் நேரடியாக அதிகாரிகளால் செயல்படுத்தப்படும் முறையில் சாவடிகளைக் கடந்து செல்ல நேரிட்டது.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பல வெளிநாட்டினர் இரு சாவடிகளிலும் காத்திருந்தனர்.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் ஜோகூர் பாருவின் பாங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (பிஎஸ்ஐ) சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் நிலையமும் துவாஸ் நோக்கிச் செல்லும் காம்ப்ளெக்ஸ் சுல்தான் அபு பக்கார் (கேஎஸ்ஏபி) சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் நிலையமும் ஒரே நேரத்தில் மின்கோளாறால் நிலைகுலைந்தன.
பிஎஸ்ஐ சாவடியில் உள்ள தானியங்கிச் சாவடிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. அங்கு அதன் 39 தானியங்கி மின்கதவுகளும், பேருந்துகளுக்கான பிரிவில் இருந்த 29 இயந்திரங்களும் சில நாள்களாகவே பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தன என்று அறியப்படுகிறது.
சனிக்கிழமையன்று வார இறுதியை முன்னிட்டு அதிக அளவில் வெளிநாட்டினர் அங்கு குழுமியிருந்த வேளையில் அவை முழுவதுமாக இயங்கவில்லை.
சிங்கப்பூருடனான ஜோகூரின் இரண்டாம் இணைப்புப் பாலம் அமைந்துள்ள துவாஸ் சோதனைச் சாவடியை நோக்கியுள்ள கேஎஸ்ஏபி சாவடியில் 12 தானியங்கி மின்கதவுகள் உள்ளன.
உள்ளூர் கடப்பிதழைப் பயன்படுத்தும் மலேசியர்கள் மின்கதவுகளைப் பயன்படுத்தியபோது எவ்வித தடையும் ஏற்படவில்லை. மோட்டார் சைக்கிளோட்டிகளும் வாகன ஓட்டுநர்களும் பிரச்சினையின்றி சாவடிகளைக் கடந்து செல்லமுடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
பிஎஸ்ஐ நிலையத்துடன் அருகில் உள்ள கேடிஎம் (KTM) ரயில் நிலையத்திலும் மின்கதவுகளில் கோளாறு ஏற்பட்டதாக அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி கூறினார். கட்டம் கட்டமாக தடைகள் சீரமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மலேசியாவிற்கும் குறிப்பாக ஜோகூருக்கும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஆண்டாக 2026ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இது நடந்திருப்பது துரதிஷ்டவசமானது என்று அந்த அதிகாரி கவலையுடன் கருத்துரைத்தார்.

