விந்துக்கொடை மோசடியில் பணத்தைப் பறிகொடுத்த ஆடவர்

2 mins read
eb13f199-1d8f-4171-9675-4b611655662c
மாதிரிப்படம்: - பிக்சாபே

கோலாலம்பூர்: விந்துக்கொடை அளித்தால் பணம் கிடைக்கும் என்ற இணைய விளம்பரத்தை நம்பி, 49 வயது ஆடவர் ஒருவர் 25,000 ரிங்கிட்டிற்கும் (S$7,733) அதிகமான பணத்தை இழந்தார்.

அழகான பெண்ணின் படத்துடன் வெளியான அவ்விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட லீ என்ற அந்த ஆடவர், இணையப் படிவம் மூலம் தமது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்ட சென் என்ற பெண் வாட்ஸ்அப் மூலம் அவரைத் தொடர்புகொண்டார். விந்துக்கொடைத் திட்டத்தில் பாலியல் உறவுகொள்வதும் அடங்கும் என்றும் அப்பெண் சொன்னதாகக் கூறப்பட்டது.

“தன்னுடையது என்று சொல்லப்படும் படத்தையும் குரல்பதிவுகளையும் சென் அனுப்பினார். ஆயினும், அப்படம் ‘மாடலிங்’ முகவையிடமிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறோம்,” என்று மலேசியச் சீனர் சங்கத்தின் பொதுச் சேவை, புகார்ப் பிரிவுத் தலைவர் மைக்கல் சோங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லீயைத் தன்னுடைய வழக்கறிஞருடன் இணைப்பதற்குத் தேவை எனக் கூறி, முதற்கட்டமாக 1,000 ரிங்கிட் செலுத்துமாறு அவரிடம் சொன்னார் சென். அதனைத் தொடர்ந்து, வழக்கறிஞராகக் கூறப்பட்டவரிடமிருந்து லீக்கு ஒப்பந்த விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், சென்னைக் கருத்தரிக்க வைத்துவிட்டால் லீக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 48 மணி நேரத்திற்குள் லீக்கு 300,000 ரிங்கிட் தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாக ‘தி ஸ்டார்’ செய்தி கூறியது.

சான்றுபெற்ற மலேசியச் சட்ட நிறுவனத்தின் பெயர் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தாலும் போதிய கல்வியறிவு இல்லாததாலும் மோசடிக்கான அறிகுறிகளை லீ கவனிக்கத் தவறினார்.

பின்னர் 300,000 ரிங்கிட்டை லீயின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான செயல்பாட்டுக் கட்டணம் எனக் கூறி 24,000 ரிங்கிட்டை அந்த வழக்கறிஞர் கேட்டுள்ளார். அதனையும் லீ செலுத்திவிட்டார்.

அதன்பிறகும் அவ்வழக்கறிஞர் தம்மிடம் 30,000 ரிங்கிட்டைக் கேட்கவே, தாம் மோசடிக்கு ஆளாக்கப்பட்டதை லீ உணர்ந்தார்.

அதன்பின் மோசடிப் பேர்வழிகளுடனான தொடர்புகளை நிறுத்திக்கொண்ட லீ, சோங்கிடம் உதவி நாடினார். சம்பந்தப்பட்ட சட்ட நிறுவனத்தைத் தொடர்புகொண்டார் சோங். அப்போதுதான், சென் அதன் வாடிக்கையாளர் இல்லை என்பதும் மோசடிப் பேர்வழிகள் அந்நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதும் உறுதியானது.

“மோசடிப் பேர்வழிகள் உள்ளூர்க் கும்பல்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். அவர்கள் உள்ளூர்ச் சட்ட நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டு, அவற்றின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்றனர். அப்பெண்ணின் குரல் பதிவுகள் உள்ளூர்வாசியினுடையதுபோல் தெரியவில்லை, இயந்திர மனிதனுடையதுபோல் தெரிகிறது,” என்று சோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்