மோசடிக்காரர்கள் சார்பாக $150,000 மதிப்புள்ள நகைகளையும் ரொக்கத்தையும் வசூலித்ததாக 40 வயது ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
டான் மிங் சுவான் எனப்படும் அந்த ஆடவர், குற்ற நடவடிக்கைகள் மூலம் பெற்ற நகை, பணத்தை வைத்திருக்க மற்றோர் ஆடவருடன் இணைந்து செயல்பட்டதாக, அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு தெரிவித்தது.
சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடைபெறுவதாகக் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) புகார் கிடைத்ததைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் டான் கைது செய்யப்பட்டார்.
மோசடிக்காரர்கள் சார்பாகச் செயல்பட்ட அவர், மோசடியில் சிக்கிய ஒருவரிடம் $150,000 மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கத்தை குறிப்பிட்ட ஓரிடத்தில் வைக்குமாறு கூறினார். அவரும் அதேபோல செய்தார். பின்னர் காவல்துறைக்குப் புகார் சென்றது.
மோசடி ஒழிப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அரசாங்க அதிகாரிபோல வேண்டுமென்றே டான் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.
மோசடியில் சிக்குவோரிடம் பணத்தை வசூலித்து அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் ஒப்படைக்குமாறு டான் உத்தரவிடப்பட்டார்.
மத்திய காவல்துறைப் பிரிவில் விசாரணைக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு உள்ள அவர், வழக்கு விசாரணைக்காக மீண்டும் ஜூலை 21ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.